தமிழகம்

கல்லணை கால்வாயைக்கரையை ஒட்டிய வெட்டிக்காடு - ஈச்சன்கோட்டை சாலையை விரிவுபடுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

கல்லணை கால்வாய்க்கரை சாலையில் வெட்டிக்காடு- ஈச்சன்கோட்டை வரை இரு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் உஞ்சிவிடுதியைச் சேர்ந்த வெ.துரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கல்லணை கால்வாய் கரைச் சாலை தஞ்சாவூரிலிருந்து வெட்டிக்காடு, ஈச்சன்கோட்டை வழியாக புதுக்கோட்டை வரை செல்கிறது.

வெட்டிக்காடு ஈச்சன்கோட்டை வரை 12 கிலோ மீட்டர் தூரம் சாலையின் அகலம் 10 அடிக்கும் குறைவாகவே உள்ளது. இந்தச் சாலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமத்தினர், மாணவ, மாணவிகள் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், தஞ்சாவூர் செல்வதற்கும் வெட்டிக்காடு- ஈச்சன்கோட்டை சாலையை பயன்படுத்தி வருகிறது.

சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே 12 கிலோ மீட்டர் தூரம் உள்ள வெட்டிக்காடு- ஈச்சன்கோட்டை சாலையை இரு வழிச்சாலையாக விரிவுபடுத்தக்கோரி அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே வெட்டிகாடு- ஈச்சன்கோட்டை சாலையை இரு வழிப்பாதையாக விரிவுபடுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மனுதாரரின் மனு ஏற்கப்பட்டு மனுதாரர் குறிப்பிட்டுள்ள சாலையை மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுக்கு முன்மொழி அனுப்பப்பட்டுள்ளது. மனுதாரரின் விண்ணப்பம் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்றார்.

இதையடுத்து மனுதாரரின் மனுவை பரிசீலித்து சாலையை விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT