தமிழகம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் சிறை

செய்திப்பிரிவு

கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கம்(65). இவரது மகள் கோமதி(45), மகன் மகேந்திரன்(38). இந்நிலையில், கோமதி தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்து, சிவக்குமார் என்பவருடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். அருகி லேயே மகேந்திரன், தனது மனைவி திலகவதியுடன் வசித்து வந்தார்.

கோமதியின் குடும்ப வாழ்க்கை தொடர்பாக மகேந்திரனுக்கும், அவரது தாய்க்கும், சகோதரிக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இதுதொடர்பாக 2013 ஜனவரி 14-ம் தேதி ஏற்பட்ட தகராறில் மகேந்திரனை, அவரது தாய் தங்கம், சகோதரி கோமதி மற்றும் சிவக்குமார் ஆகியோர் கட்டை, கம்பியால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸார் விசாரணை நடத்தி, 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.ஏ.ரகுமான், குற்றம் சுமத்தப்பட்ட தங்கம், கோமதி, சிவக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT