கோயிலுக்கு வழிப்படச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மூதாட்டி ஒருவரிடம் பேசும் போது அவர் ஸ்டாலின் கோயிலுக்கு வருவாரா? பெருமாள் மீது நம்பிக்கை உண்டா என்று கேட்க வருவார் பாட்டி, நம்பிக்கை உண்டு என்று துர்கா பதிலளிக்கும் காணொலி வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் தி.க.விலிருந்து பிரிந்தவர்கள் அண்ணா தலைமையில் 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திமுக என்கிற கட்சியை உருவாக்கியபோது, கடவுள் மறுப்பு கொள்கைக் கொண்ட இயக்கமாக இல்லாமல், திமுக அனைவரையும் ஏற்கும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கொள்கை கொண்ட இயக்கம் என அண்ணா அறிவித்தார்.
அண்ணாவைப் பின்பற்றிய அவரது தம்பிமார்களில் கருணாநிதி கடவுள் மறுப்புக் கொள்கையாளராகவும், எம்ஜிஆர் ஆரம்பத்தில் கடவுள் மறுப்பாளராக இருந்து பின்னர் தீவிர மூகாம்பிகை பக்தராகவும் மாறினார்.
ஆனாலும் இருவரும் அதை தங்கள் ஆட்சிப்பணியில் காண்பிக்காமல் சமூக நீதிக்கான பல நல்ல திட்டங்களை அமல்படுத்தினர். இதனால் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் சமூகப் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த மாநிலமாகவே உள்ளது.
திமுகவிலும் 1980 களுக்கு மேல் தீவிர கடவுள் மறுப்பாளர் தலைவர்கள் குறைந்து மத நம்பிக்கையுள்ள பல தலைவர்கள் முன்னணி பொறுப்புக்கு வந்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது மத நம்பிக்கை குறித்து பொதுவெளியில் வெளிக்காட்டிக்கொண்டதில்லை. சமீபத்தில் அவரது மத நம்பிக்கை குறித்தும், திமுகவை இந்து விரோத கட்சி என்றும் விமர்சித்தபோது அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கொள்கைதான் திமுகவின் கொள்கை என்று தெரிவித்த ஸ்டாலின் என் வீட்டில் என் மனைவி தீவிர தெய்வபக்தி கொண்டவர் என்று பேசினார்.
துர்கா ஸ்டாலின் தீவிர மத நம்பிக்கை உள்ளவர். ஊர் ஊராக திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது அவரது வழக்கம். நெல்லை சென்றிருந்த அவர் நாங்குநேரி வானுமாலை பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் துர்காவின் உறவினர் பெண்கள் மற்றும் திமுக நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு உடனிருந்தனர்.
அப்போது கோயிலுக்கு வந்த மூதாட்டி ஒருவரிடம் அர்ச்சகர், துர்காவை அறிமுகப்படுத்தி, 'இவர்தான் கருணாநிதி மகன் தலைவர் ஸ்டாலினின் மனைவி ' என்று கூறினார். அப்படியா எனக்கேட்டு மகிழ்ச்சியடைந்த அந்த மூதாட்டி ஸ்டாலின், பிள்ளைகள் நலமா என விசாரித்தார். உங்கள் வயசு என்னன்னு துர்கா அவரிடம் வினவ 85 வயசுன்னு சொன்னார், கோயிலுக்கு வந்திருக்க ஸ்டாலின் வரமாட்டாரா என்று அவர் கேட்க வருவாரு பாட்டின்னு சொல்கிறார் துர்கா.
அவருக்கு பெருமாள் மேல் நம்பிக்கை இருக்கா என்று கேட்க எல்லாம் நம்பிக்கை இருக்கு பாட்டி வருவார் என்று துர்காவும், உடன் வந்தவர்களும் கோரஸாக கூறுகின்றனர்.
இந்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது. இதை வைத்து அவரவர் அவரவருக்கு ஏற்றப்படி சமூக வலைதளங்களில் கருத்துக் கூறுவதையும் காணமுடிகிறது.