இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்தக்கோரிய வழக்கில் அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் முத்துமாரியம்மன் கோயில் பழமையானது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தென் மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆடித்திருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இருப்பினும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் கோவிலில் செய்து தரப்படவில்லை.
கோவில்களில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுகின்றன. கோயில் வளாகம் சுகாதாரமாக பராமரிக்கப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக கோவில் பாதுகாப்பு அறை திறக்கப்படவில்லை.
கோயில் வணிக வளாகம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவில் மின்சாரத்தை போலீஸ் அவுட் போஸ்ட்டுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் கோயில் நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் காணிக்கை முடி திருட்டில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இருக்கன்குடி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கவும், இக்குழு ஆலோசனை நடத்தி
பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக விருதுநகர் ஆட்சியர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 5-க்கு ஒத்திவைத்தனர்.