4 ஆண்டு சிறைவாசத்துக்குப்பின் விடுதலையான சசிகலா வரும் பிப் 8-ம் தேதி சென்னை திரும்புகிறார். அவரை தமிழக எல்லை முழுவதும் அதிமுக, அமமுக தொண்டர்கள் வரவேற்க ஏற்பாடு செய்து வருகின்றனர். சென்னையில் 12 இடங்களில் அவரை வரவேற்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதா இருந்தவரை சக்திமிக்க செல்வாக்கானவராக இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் 2017-ம் ஆண்டு சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தற்போதுள்ள அதிமுக தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி பொதுக்குழு மூலம் தேர்வு செய்தனர். அதன்பின்னர் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பதவி ஏற்புக்கு சில நாட்கள் உள்ள நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை என உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததை அடுத்து சிறைக்குச் சென்றார்.
சிறைச் செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்தும், கட்சிப்பணியை கவனிக்க டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச் செயலாளராகவும் நியமித்துவிட்டுச் சென்றார். அதன்பின்னர் ஓபிஎஸ்-இபிஎஸ் மீண்டும் இணைய சசிகலா, டிடிவி உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியதாக அறிவித்தனர். தன்னை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க முடியாது, என கட்சியின் சட்ட திட்ட விதிகளை வைத்து சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் 4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து வரும் 8-ம் தேதி சென்னை திரும்புகிறார் சசிகலா, சென்னை வரும் வழியில் தமிழக எல்லையிலிருந்து அமமுகவினர், அவரது ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.
சென்னையிலும் இதேபோல் சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அமமுகவினர் திட்டமிட்டுள்ளனர். ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா செல்லவிருந்த நிலையில் அது பராமரிப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுச் செயலாளர் என்கிற முறையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா செல்வார் என்று கூறப்படுகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா செல்வாரா என டிடிவி தினகரனிடம் கேட்டபோது எல்லாவற்றையும் நானே சொல்லிவிட முடியுமா, அவர் வந்து சிலவற்றைச் சொல்வார் என்று தெரிவித்தார். இதன் மூலம் சசிகலா அதிமுக தலைமை அலுவலகம் செல்வது உறுதி என தெரிகிறது.
சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அனுமதி கோரி சென்னை காவல் ஆணையரிடம் அமமுக சார்பில் அனுமதி கேட்டு அமமுக நிர்வாகி செந்தமிழன் நேற்று முன் தினம் மனு அளித்தார்.
இந்த மனு காவல் ஆணையர் பரிசீலனையில் உள்ளதாகவும் அதுகுறித்து உரிய முடிவு இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது. சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் என அமைச்சர்கள் புகார் அளித்துள்ள நிலையில், சென்னையில் வரவேற்பு, பேரணிக்கு போலீஸார் அனுமதி அளிக்க மாட்டார்கள் என காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.