தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 பள்ளிகளில் நவீன தானியங்கி கழிப்பறைகள்: மாணவர்கள் வரவேற்பு

கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் மற்றும் பொன்னமராவதி வட்டங்களில் 19 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 47 நவீன சுகாதார தானியங்கி கழிப்பறைகள் (இ-டாய்லெட்) அமைக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் பயனுள்ள வகையில் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் முயற்சியால், தனியார் நிறுவனம் மூலம் பி.அழகாபுரி, பொன்புதுப்பட்டி, அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளிலும், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரி (மகளிர் பள்ளி), நற்சாந்துபட்டி ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, குழிப்பிறை ஆர்.எம்.ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தலா 4-ம், கோனாப்பட்டு சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் 3 கழிப்பறைகளும் அமைக்கப்பட் டுள்ளன. மேலும், பனையப்பட்டி அலமேலு அருணாசலம் உயர்நிலைப் பள்ளி, ராயவரம் காந்தி உயர்நிலைப் பள்ளியில் தலா 2-ம், பன்னீர்பள்ளம், மேல்நிலைப்பட்டி, திருவன்னைக்காவன்பட்டி, பூலாம்பட்டி, குழத்துப்பட்டி, லெம்பலக்குடி, திருமயம், துலாயனூர் பள்ளிகளில் தலா ஒன்று என 19 பள்ளிகளில், தலா ரூ.1 லட்சம் மதிப்பில் 47 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கழிப்பறைகளின் மேல்பகுதியில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டி, உள்பகுதியில் மின்விளக்கு, மின்விசிறி மற்றும் வெளிப்பகுதியில் கைகழுவும் தொட்டி உள்ளது.

கதவைத் திறந்தால் தானாகவே கழிவறையில் உள்ள பீங்கானில் சுமார் 1 லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படுகிறது. மின்விளக்கு, மின்விசிறி தானாக இயங்குகிறது. பின்னர், கழிவறையைப் பயன்படுத்திவிட்டு வெளியேறுவதற்காக மீண்டும் கதவை திறக்கும்போது மீண்டும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படுகிறது. இதேபோல, தொடர்ந்து 10 முறை பயன்படுத்தியபிறகு கழிவறையின் தரைத்தளம் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படுகிறது.

நவீன கழிப்பறைகளை தேவையான நேரங்களில் மட்டும் பயன்படுத்துவதற்காக, தலைமை ஆசிரியர் அறையில் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கழிப்பறைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பள்ளி மாணவ, மாணவியர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா கூறும்போது, “எங்கள் பள்ளியில் 4 இ-டாய்ெலட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. தண்ணீர் குறைந்தால் அதற்குரிய எச்சரிக்கை விளக்கு எரிகிறது. தேவையான நேரங்களில் மட்டும் மின்விளக்கு, மின்விசிறி பயன்படுத்தப்படுவதால் மின்சாரம் குறைந்த அளவே செலவாகிறது. மேலும், தேவையான அளவு மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ள இக்கழிப்பறையைப் பராமரிக்க, தனியாக ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்” என்றார்.

பல அரசுப் பள்ளிகளில் போதிய அளவு கழிப்பறைகள் இல்லாமலும், இருக்கும் கழிப்பறைகளையும் முறையாகப் பராமரிக்காத சூழலில், நவீன கழிப்பறை வசதி மாணவ. மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் இதுபோன்ற வசதியை ஏற்படுத்த வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SCROLL FOR NEXT