கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற முடியாதவர்கள் அரசு, மற்றும் வணிக வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்திட தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதுவரை வழங்கப்படாமல் உள்ள பயிர்காப்பீட்டுத் தொகை கிடைத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது 2019 - 2020 ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றின் காரணமாகவும், நிவர், புரெவி புயல் காரணமாகவும், கடந்த மாதம் பருவம் தவறி பெய்த பெருமழையின் காரணமாக விவசாயிகள் கடன் பெற்று விளைவித்த நெல் மற்றும் புன்செய் பயிர்கள் பெருமளவு அழிந்து விட்டன.
இவற்றின் காரணமாக விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். நெருக்கடியிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், இதர சங்கங்களும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும், பயிரிழப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் வற்புறுத்தி தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தி வந்தன.
இந்தச் சூழலில் நேற்று (05.02.2021)தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் 31.01.2021 நிலவரப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்ற 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 12,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. காலம் தாழ்த்தாமல் அதற்கான நிதிஒதுக்கி அறிவிப்பின்படி தள்ளுபடி செய்திட வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற முடியாதவர்கள் அரசு, மற்றும் வணிக வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்திட தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதுவரை வழங்கப்படாமல் உள்ள பயிர்காப்பீட்டுத் தொகை கிடைத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும் வற்புறுத்துகிறோம்”.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.