டி.ஆர்.பாலு: கோப்புப்படம் 
தமிழகம்

உயிரி - மருத்துவக் கழிவு மேலாண்மை பணியாளர்களுக்கு கரோனாவை எதிர்கொள்ள உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டனவா? - மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி

செய்திப்பிரிவு

திமுக பொருளாளரும் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நேற்று (பிப். 05) மக்களவையில், உயிரி - மருத்துவக் கழிவு மேலாண்மை பணியாளர்களுக்கு, கரோனாவை எதிர்கொள்ள, உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டனவா என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபேயிடம், உயிரி - மருத்துவக் கழிவு மேலாண்மை பணியாளர்களுக்கு, கரோனாவை எதிர்கொள்ள தேவையான, உரிய பாதுகாப்பு உபகரணங்கள், வழிகாட்டு நெறிமுறைகளுக்கேற்ப, வழங்கப்பட்டனவா? என்றும், கரோனாவால் எத்தனை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்றும், அவர்களுக்கு தடுப்பூசியை அளிக்க, மத்திய அரசு, என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? என்றும், விரிவான கேள்வியை, மக்ககவையில் எழுப்பினார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணையமைச்சர், மக்களவையில் அளித்த பதில்:

மத்திய மாசுக் கட்டுப்பாடு ஆணையத்தின், உயிரி-மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி, கழிவுகளை கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் கடமையாகும்.

இதற்கான கரோனா கால வழிமுறைகள், ஏற்கெனவே மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ளன என்றும், வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தனி நபர் பாதுகாப்பு உடைகள், மூன்றடுக்கு முகக்கவசங்கள், தரமுள்ள கையுறைகள், காலணி உறைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் ஆகியவற்றை கழிவுகளை கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, அந்தந்த நிறுவனங்களே வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

டெல்லியிலுள்ள சப்தர்ஜங், ராம் மனோகர் லோகியா மற்றும் லேடி ஹார்டிங் ஆகிய மத்திய அரசு மருத்துவமனைகளில், கழிவுகளை கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கேற்ப, உரிய போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள், மாநிலப் பட்டியலில் இருப்பதால், கரோனாவால் எத்தனை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் மத்திய அரசிடம் இல்லை என்றும், கழிவுகளை கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தடுப்பூசி அளிக்க, தேசிய தடுப்பூசி நிர்வாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மக்களவையில் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு, விரிவாக பதிலளித்துள்ளார்.

SCROLL FOR NEXT