இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவே பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுகின்றன என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பாஜக சார்பில் தொழில்துறையினர் பங்கேற்ற மத்திய நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம், திருப்பூரில் நேற்று நடைபெற்றது. தொழில்துறையினரின் கேள்விகளுக்கு வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
முன்னதாக, செய்தியாளர்களி டம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்காகஅதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு விவகாரத்தை பொறுத்தவரை, மத்திய அரசுமட்டும் முடிவு செய்ய இயலாது. மாநில அரசுகளுக்கும் பங்குள்ளது. சிறு, குறு தொழில்களை காக்கவே, அவர்கள் வாங்கிய கடனில் 20 சதவீதம் உடனே பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, கோவைக்கு ரூ.1600 கோடி என்றால், அதற்கும் அதிகமாக திருப்பூரில் உள்ள சிறு, குறுநிறுவனங்களுக்கு அளிக்கப் பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தனியார் முதலீடுகள் தேவைப்படுகின்றன. அதற்காக, மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள துறைகளை விடுவித்துக் கொடுக்கிறது. தனியார் முதலீடு வரும்போது வேலைவாய்ப்பு உருவாகிறது. அப்போதுதான் உலக நாடுகளுடன் போட்டி போட முடியும். ஏழைகளின் படிப்பு, முன்னேற்றம், நாட்டின் உள்கட்டமைப்பு வசதி அனைத்துக்கும் நிதி தேவை.இதற்காகவே, நல்ல நிலையில் செயல்படும் நிறுவனங்களின் பங்குகளில் சிறிதளவை அளித்து நிதி திரட்டுகிறோம். பொதுத் துறை நிறுவனங்களை முழுமையாக தனியாரிடம் கொடுக்கவில்லை என்றார்.