முகமது நபி குறித்து பாஜக நிர்வாகி அவதூறாக பேசியதாக கூறி, நேற்று முஸ்லிம் கூட்டமைப்பினர் பூந்தமல்லியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தமிழகம்

பாஜக நிர்வாகிக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தில் முஸ்லிம் அமைப்புகள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

முகமது நபி குறித்து பாஜக நிர்வாகிஅவதூறாக பேசியதாக கூறி, நேற்றுமுஸ்லிம் அமைப்புகள் திருவள்ளூர்மாவட்டத்தில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கோவையில் சமீபத்தில் நடந்தகூட்டம் ஒன்றில், பாஜக நிர்வாகி கல்யாணராமன், முகமது நபிகள்குறித்து அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நேற்று முஸ்லிம் அமைப்புகள் சாலைமறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

பூந்தமல்லி அரசு மருத்துவமனை அருகே உள்ள மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வந்த முஸ்லிம் கூட்டமைப்பைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள், தமுமுக மாவட்ட நிர்வாகி ஷேக் தாவூது தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அவர்கள் காவல் துறையினர் வைத்திருந்த தடுப்புகளை மீறி டிரங்க் சாலைக்கு சென்று மறியலில் ஈடுபட்டதோடு, கல்யாணராமனுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். பின்னர், பூந்தமல்லி போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.

அதேபோல், ஆவடியில், புதிய ராணுவ சாலை மசூதி அருகே முஸ்லிம்அமைப்புகள் மற்றும் அனைத்து ஜமாத்துகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும்சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில், மனித நேய மக்கள் கட்சியின் இளைஞரணியின் மாநில செயலாளர் ஷேக் முகமது அலி உள்ளிட்டோர் பங்கேற்று, கல்யாணராமன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முழக்கமிட்டனர். பின்னர் அவர்களை ஆவடி போலீஸார் கலைந்து போக செய்தனர்.

மேலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகி அமீர்கான் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கண்டன முழக்கமிட்டனர்.

SCROLL FOR NEXT