‘‘தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை’’ என இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை ஒடுக்க, நாட்டின் எல்லையைப் பாதுகாப்பது போல் தடுப்புகள் அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மேலும் விவசாயிகளை எம்.பி.,கள், அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க விடாமல் தடுப்பது அதைவிட கண்டிக்கத்தக்கது. இது மத்திய அரசின் சர்வாதிகார போக்கின் உச்சம்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விஷயத்தை மத்திய அரசு பந்தாடி வருகிறது. இது மத்திய அரசின் நயவஞ்சகப் போக்கு. இது சரியானது அல்ல. இவ்விஷயத்தில் மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என கூறிக்கொள்ளும் அதிமுக, உள்ளாட்சித் தேர்தலை கண்டு அஞ்சுகிறது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துகிறது. இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இயற்கை சீற்றம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதேபோல் பலமுறை மத்திய குழு வந்தும், இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை.
கடந்த டிசம்பரில் மத்திய குழு ஆய்வு செய்தததால் எந்த பயனும் ஏற்படவில்லை. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம். ஆனால் 2.47 ஏக்கருக்கே (ஒரு ஹெக்டேர்) ரூ.20 ஆயிரம் தான் அறிவித்துள்ளனர்.
மதுரையில் பிப்.18-ம் தேதி ‘தமிழகத்தை மீட்டெடுப்போம்’ என்ற அரசியல் எழுச்சி மாநாட்டை நடத்த உள்ளோம். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி நடக்கும் இந்த மாநாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எங்களது கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கின்றனர்.
பாஜக தமிழகத்தில் ஜாதி, மத மோதல்களை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்த எண்ணுகிறது. தமிழகத்தில் 3-வது கூட்டணி என்பது சாத்தியமில்லை. ஒன்று திமுக தலைமையிலான பலமான கூட்டணி. மற்றொன்று அதிமுக தலைமையில் கூட்டணி அமையும்.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது அக்கறை காட்டுகிறது. ஆனால் ஏழைகளின் நலனின் அக்கறை இல்லை. அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதில்லை, என்று கூறினார். அருகில் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உடனிருந்தார்.