நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கருங்கண்ணியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் மத்தியக் குழுவினரிடம் காட்டினர். 
தமிழகம்

மத்தியக் குழு ஆய்வு; கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க நாகை விவசாயிகள் வலியுறுத்தல்

தாயு.செந்தில்குமார்

கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என மத்தியக் குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய மீன்வளத்துறை மேம்பாட்டு ஆணையர் பவுல் பாண்டியன் தலைமையில், மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் அமைச்சக மண்டல மேலாளர் ரனஞ்சய்சிங், மத்திய மின்சார ஆணைய உதவி ஆணையர் ஷீபம்கார்க் ஆகியோர் அடங்கிய மத்தியக் குழுவினர், வேளாங்கண்ணி அருகே கருங்கண்ணி பகுதியில் மழையால் சேதம் அடைந்த பயிர்களை இன்று (பிப். 05) பார்வையிட்டனர். பின்னர் பயிர் பாதிப்பு மற்றும் பருவம் தவறிப் பெய்த மழையளவு குறித்து வேளாண்மைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகையைப் பார்வையிட்டனர்.

அப்போது நாகை மாவட்டத்தில் பருவம் தவறி இந்த அளவு மழை பெய்துள்ளதா என மாவட்ட ஆட்சியர் பிரவீன்.பி நாயரிடம் கேட்டனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து மத்தியக் குழுவினரிடம் விவசாயிகள் கூறியதாவது:

"கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்துள்ளோம். ஆனால், அரசு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் அறிவித்துள்ளது. அதுவும் சதவீத அடிப்படையில்தான் நிவாரணம் வழங்கப்படுகிறது.

பருவம் தவறிப் பெய்த மழையால் 4 முறை பூச்சி மருந்து அடிக்கப்பட்டுள்ளது. 3 முறை உரம் போடப்பட்டுள்ளது. வழக்கமாக ஏக்கர் ஒன்றுக்கு 45 மூட்டை நெல் கிடைக்கும். எனவே, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால், பருவம் தவறிப் பெய்த மழையால் வெறும் 6 மூட்டை மட்டுமே நெல் கிடைக்கும்.

அறுவடை இயந்திரம் (பெல்ட் இயந்திரம்) 1 மணி நேரத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வாடகை கேட்கிறார்கள். இன்னும் நிலம் ஈரமாக இருப்பதால் டயர் இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்ய முடியாது. இந்தச் சூழ்நிலையில் அறுவடைக் கூலி கூடக் கொடுக்க முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

மத்தியக் குழு காலதாமதமாக வந்து பார்வையிட்டுள்ளது. இயற்கை இடர்ப்பாடு காலங்களில் மத்தியக் குழு, மாநிலக் குழு எனக் குழுக்கள் வந்து பார்வையிடுகின்றன. ஆனால், விவசாயிகள் கேட்கும் நிவாரணம் கிடைப்பதில்லை".

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மத்தியக் குழுவினர் நாகை அருகே பாலையூர் பகுதியில் சேதம் அடைந்த நெற்பயிர்களை வயல் வரப்பில் நின்று பார்வையிட்டனர்.

நாகை மாவட்டம் நாகை ஒன்றியம் பாலையூரில் மத்தியக் குழுவினரிடம் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் காட்டினர்.

அப்போது விவசாயிகள் கூறுகையில், "தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் வடிகால் பகுதியாக நாகை உள்ளது. மேலும், கடல் நீர் உட்புகுவதால் நிலத்தின் தன்மை மாறி விளைச்சல் பாதிக்கப்படுகிறது. எனவே, பயிர் பாதிப்புகளைப் பொது பாதிப்பாகக் கருதி இன்சூரன்ஸ் தொகையை முழுமையாக அறிவிக்க வேண்டும். அதை விட்டு விளைச்சல் அடிப்படையில் இன்சூரன்ஸ் தொகை அறிவித்தால் விவசாயிகள் அதிக அளவில் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்" எனக் கூறினர்.

பின்னர் மத்தியக் குழுவினர் மயிலாடுதுறை சென்றனர். அங்கு திருவிளையாட்டம், அன்னப்பன்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களைப் பார்வையிட்டனர். பின்னர் கேதிபேட்டையில் கனமழையால் பாதிக்கப்பட்ட கடலைப் பயிர்களைப் பார்வையிட்டனர்.

SCROLL FOR NEXT