பேரறிவாளன் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள ஆளுநர் தரப்பு, குடியரசுத் தலைவரே முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் நல்ல முடிவெடுப்பார் என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு இன்று அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:
''எழுவர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருகே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆளுநரைச் சந்திக்கும் போதெல்லாம் எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளோம் என்று முதல்வரே தெரிவித்துள்ளார்.
எங்களைப் பொறுத்தவரை நேற்று, இன்று, நாளை என எப்போதும் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. குடியரசுத் தலைவரைப் பொறுத்தவரை நல்ல முடிவை எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது.
எங்களைப் பொறுத்தவரை ஆளுநரைச் சந்திக்கும்போது அழுத்தத்தைக் கொடுத்துள்ளோம். அவரைச் சந்திக்கும்போது முதல்வர், எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளார். எழுவர் விடுதலை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.
திமுகவைப் போல் இரட்டை வேடம் போடாமல் ஒருவருக்கு மட்டும் தண்டனையைக் குறைக்க தீர்மானம் போடாமல் அனைவரும் விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானம் போட்டுள்ளோம்''.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.