காஞ்சிபுரம் அருகே ஏற்பட்ட கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. அந்தப் பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் திருமுக்கூடல் அருகே உள்ளது மதூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கல்குவாரியில் நேற்று (பிப். 04) சிலர் பணி செய்து கொண்டிருந்தபோது மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கி வாலாஜாபாத் நத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இருவர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அன்சாரி (30) என்பவருக்கு அதிக காயம் இருந்ததைத் தொடர்ந்து, அவர் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு 10.30 மணி அளவில் உயிரிழந்தார்.
மண்சரிவுக்குள் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா என்பதை அறிய மோப்ப நாய் உதவியுடன் சோதனைகள் நடைபெற்றன. வேறு யாரேனும் காணாமல் போயுள்ளார்களா என்றும் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையில் மண்சரிவுக்குள் வேறு யாரும் சிக்கி இருக்க வாய்ப்பில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மாலை 5 மணி வரை சரிந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. பின் மாலை 5 மணிக்கு மேல் பணிகள் நிறுத்தப்பட்டன. இன்று (பிப். 05) காலையில் அந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சரிந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
மண்சரிவில் வேறு யாரேனும் சிக்கி உள்ளார்களா என்பதைக் கண்டறியவே முழுமையாக சரிந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லாததால் யாரும் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.