பொக்காபுரம் அருகே குறும்பர்பள்ளம் பகுதியில் இருந்த ரிவால்டோ. 
தமிழகம்

வனத்தில் தப்பிய ரிவால்டோ யானை; முதுமலை முகாமுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்ட வனத்துறை

ஆர்.டி.சிவசங்கர்

வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்து ஆண் யானை தப்பியதால், அதை முகாமுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தை வனத்துறை தற்காலிகமாகக் கைவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலப் பகுதியான மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 'ரிவால்டோ' என்ற பெயரில் அழைக்கப்படும் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானையின் துதிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக லேசான குறைபாட்டுடன் இருக்கிறது.

பெரும்பாலும் குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதிகளைச் சுற்றியே வலம் வந்த இந்த யானையை முதுமலைக்குக் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, 'ரிவால்டோ'வுக்கு மயக்க மருந்து செலுத்தாமல் கரும்பு மற்றும் பழங்களைக் கொடுத்து, முதுமலை முகாமுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.

முதல் நாள் 3 கி.மீ. பயணம் செய்த யானை, இரண்டாம் நாள் பொக்காபுரம் அருகே விபூதிமலை வனத்தில் இரவைப் போக்கியது. இரண்டு நாள் வனத்துறையினரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்த யானை மூன்றாம் நாளான இன்று (பிப். 05) காலை முதல் வனத்துறையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

இதனால், இரவு மசினகுடி சோதனைச்சாவடி கல்லல்ஹா பகுதியில் கழிக்க வனத்துறையினர் எண்ணியிருந்தனர். இந்நிலையில், 'ரிவால்டோ' வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்து தப்பி வனத்தில் மறைந்தது.

அப்பகுதியில் மற்ற யானை அல்லது விலங்கின் நடமாட்டத்தை அறிந்த 'ரிவால்டோ', அங்கிருந்து தப்பியதாகத் தெரிகிறது. இரவு சூழ்ந்த நிலையில் ரிவால்டோவைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

ரிவால்டோ நேற்று இரவு தங்கிய மானஹல்லா வனப்பகுதியில் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இந்நிலையில், ரிவால்டோவை முதுமலை முகாமுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை வனத்துறையினர் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறும் போது, "ரிவால்டோவை வனத்துறை ஊழியர்கள் 3 நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு வனத்துறையினர் கண்காணிப்பிலிருந்து யானை தப்பியது. மாவனல்லா வனப்பகுதியில் அதுகுறித்து உறுதி செய்யப்பட்டது. அது வழக்கமாக நடமாடும் வாழைத்தோட்டம் பகுதியைச் சென்றடையும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், 'ரிவால்டோ'வை முதுமலை முகாமுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்படுகிறது. அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, பிற நடைமுறைகள் குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.

மூன்று நாளாக வனத்துறையினரின் முயற்சியில் தற்காலிகமாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளின் குணாதிசயத்தை மீறி முகாமுக்கு அழைத்துச் செல்லும் பணி சவாலானது. வனத்துறையினரின் இந்த முயற்சி இந்தியாவிலேயே முதல் முயற்சியாகும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT