மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓரிரு வாரங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுகஉறுப்பினர்கள் பி.கந்தசாமி, செம்மலை உள்ளிட்டோர், ‘‘அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி எப்போது செலுத்தப்படும்?’’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்துக்கு பிப்ரவரி 1-ம் தேதி வரை 10 லட்சத்து 45 ஆயிரம் கோவிஷீல்டு, 1 லட்சத்து 89 ஆயிரத்து 920 கோவேக்ஸின் என மொத்தம் 12 லட்சத்து 34 ஆயிரத்து 920 கரோனா தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளன. முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் சுமார் 1 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக காவல், வருவாய், உள்ளாட்சித் துறையினர் உள்ளிட்ட அரசுத் துறைகளைசேர்ந்த முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. முன்களப் பணியாளர்கள், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக நானும், சுகாதாரத் துறை செயலாளரும் கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டோம்.
முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள்பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசுசார்பில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்ததும் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பத்திரிகையாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓரிருவாரங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். எவ்வித பயம்,பதற்றம், தயக்கம் இல்லாமல் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.