பொது போக்குவரத்து மூலம் 34 ஆயிரம் கி.மீ. பயணிக்க உள்ள கோ.வை.திலீபன், ஜா.ஆடம்சன்ராஜை வாழ்த்தும் நிகழ்ச்சியில் கடலோரக் காவல்படையின் கொடியை சென்னை பிரிவு கமாண்டென்ட் நா.சோமசுந்தரம் வழங்கினார். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

8 விமானங்கள், 34 ரயில்கள், 18 பேருந்துகள் என பொது போக்குவரத்து மூலம் நாடு முழுவதும் 34,500 கி.மீ. சுற்றுப் பயணத்தை தொடங்கும் இளைஞர்கள்

செய்திப்பிரிவு

பொது போக்குவரத்து மூலம் நாடு முழுவதும் 34,500 கிமீ தூரம் பயணித்து கின்னஸ் சாதனை படைக்கவுள்ள 2 இளைஞர்களை சென்னையில் நேற்று பல்வேறு அமைப்புகள் வாழ்த்தின.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரயில் சுற்றுலா தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவர் கோ.வை.திலீபன், சுற்றுலா படிப்பில் முதுநிலை படிப்பு முடித்துள்ள ஜா.ஆடம்சன்ராஜ் இருவரும் இணைந்து, பொது போக்குவரத்து மூலம் நாடு முழுவதும் 34,500 கி.மீ. தூரம் பயணித்து கின்னஸ் சாதனை புரிய திட்டமிட்டுள்ளனர்.

இவர்களை வாழ்த்தி, வழியனுப்பும் விழா சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்று வாழ்த்தின. இந்நிகழ்ச்சியில், பயணத்தின்போது அவர்கள் கொண்டுசெல்ல இந்திய கடலோர காவல்படையின் கொடியை, அப்படையின் சென்னை பிரிவு கமாண்டென்ட் நா.சோமசுந்தரம் வழங்கினார்.

அவர் பேசும்போது, “கடலோர காவல் படை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இவர்களிடம் இந்த கொடி வழங்கப்படுகிறது. இவர்களுக்கான உணவு,தங்கும் வசதி, பயணம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்வதற்கான ஒருங்கிணைப்பு பணியை கடலோர காவல்படை மேற்கொள்ளும்” என்றார்.

கோ.வை.திலீபன், ஜா.ஆடம்சன் ராஜ் கூறும்போது, “கரோனாவால் சுற்றுலா முடங்கியுள்ளது. அதை மீட்டெடுக்க வேண்டும். பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசல், காற்று மாசுவை குறைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, பொது போக்குவரத்து மூலம் இந்தியா முழுவதும் 34,500 கி.மீ. பயணம் செய்து, கின்னஸ் சாதனை புரிய திட்டமிட்டிருக்கிறோம்.

பயணத்தை புதுச்சேரியில் பிப்.7-ம் தேதி தொடங்குகிறோம். 8 விமானங்கள், 34 ரயில்கள், 18 பேருந்துகளில் பயணித்து ஏப்ரல் 17-ல் ராமநாதபுரத்தில் நிறைவு செய்கிறோம்” என்றனர்.

நிகழ்ச்சியில் ரஷ்ய கலாச்சார மைய இயக்குநர் கென்னடி ஏ.ரோக்லேவ், பிரிக்ஸ் ஜெனரேஷன் அமைப்பின் நிறுவனர் முத்துகுமார், தைரியம் அமைப்பின் நிறுவனர் திபாங்கர் கோஷ், சுற்றுச்சூழல் ஆர்வலர் டி.டி.பாபு பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT