சென்னை மாநகராட்சியில் தினமும் 10 ஆயிரம் பேருக்குகரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினமும் 10 ஆயிரம் பேருக்கு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பணிபுரியும்மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்களுக்கு முதற்கட்டமாக கரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மேலும் 2-ம் கட்டமாக மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
47 மையங்கள்
சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள 1 லட்சத்து40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். தற்போது 47 மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
150 பேருக்கு மேல் பணியாற்றும் தனியார் மருத்துவமனைகளும் கரோனா தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தற்போது தினமும் 1800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தினமும் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் அளவுக்கு இலக்கு நிர்ணயித்து, அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அவை பாதுகாப்பாக குளிரூட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பர தூதர்களை நியமிப்பதுதொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.