தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகை மக்களுக்கு முழுமையாக சென்றடைய, மாவட் டந்தோறும் அனைத்துக் கட்சி குழுவை அமைக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். இந்த நிதியை, நேற்று காலை நிதித்துறை செய லாளர் சண்முகத்திடம் மு.க. ஸ்டா லின் வழங்கினார். அப்போது திமுக தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
தமிழகத்தில் பெய்துவரும் பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதியை கடந்த 17-ம் தேதி கருணாநிதி அறிவித்தார்.
இந்த நிதியை முதல்வர், தலைமைச் செயலரிடம் வழங்க நேரம் கேட்டபோது, மறுத்துவிட்டனர். தலைமைச் செயலாளரை நேரடியாக தொடர்பு கொண்டும் நேரம் கிடைக்கவில்லை. ‘வெள்ள நிவாரண நிதியை வாங்க மனமில்லையா?’ என கேட்டு கருணாநிதி கடிதம் எழுதினார்.
இதையடுத்து நிதித்துறை செயலரிடம் வழங்கும்படி தலைமைச் செயலக அதிகாரிகள் கூறினர். அதன்படி, நிதித்துறை செயலர் சண்முகத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளேன். இந்த நிதி அரசியல் நோக்கத்துக்காக வழங்கப்பட்டதல்ல. மக்களுக்கு உதவத்தான் வழங்கப்பட்டது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
தமிழக மழை நிவாரணத்துக்கு மத்திய அரசு அளித்த ரூ.940 கோடி நிதி போதுமானதா?
இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், மாவட்டந்தோறும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து, இந்த நிதி முறையாக மக்களுக்கு சென்றடைய வழி செய்ய வேண்டும்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்க்க முதல்வர் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து?
முதல்வர், அவர் வெற்றி பெற்ற தொகுதியில் அரை மணி நேரம் பார்வையிட்டார். அங்கும் தேர்தல் பிரச்சாரம் செய்வதுபோல பேசி னார். தண்ணீர் தேங்கிய பகுதி களில் இறங்கிச் சென்று மக்க ளிடம் பேசவில்லை. இதற்கு முன்பு, முதல்வராக அவர் இருந்தபோது ஹெலிகாப்டரில் சென்று சென்னை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் சேர்ந்திருப்பதை பார்த்து, அவற்றை அகற்ற ரூ.5 கோடி நிதி ஒதுக்கினார். அந்தப் பணிகள் குறித்த எந்த தகவலும் இல்லை.
தலைமைச் செயலாளர் தங்களை பார்க்க மறுத்தது ஏன்?
இந்த ஆட்சியில் எது முறையாக நடந்துள்ளது. தலைமைச் செயலகத்தில் 2 முறை மரபை மீறி அதிமுக எம்.பி.க்கள் கூட்டம் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளரும் பங்கேற்றுள்ளார்.
‘தானே’ புயலுக்கு ஒதுக்கிய ரூ.5 ஆயிரம் கோடி முறையாக செலவிடப்பட்டதா?
அதை முதல்வரிடம் கேளுங் கள்.
இவ்வாறு ஸ்டாலின் பதி லளித்தார்.