கரோனா தொற்று காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நோயிலிருந்து மீண்டு இன்று (வியாழக்கிழமை) வீடு திரும்பினார்.
தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ். இவருக்குக் கடந்த ஜனவரி 5-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து, சென்னை கிண்டி அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார்.
ஆனால், பூரணமாக குணமாகாத நிலையில் பொங்கலுக்கு முன்னதாக வீட்டுக்குச் சென்றார். இதனால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் அவர் அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
பின்னர், உறவினர்கள் விருப்பத்தின் பேரில் அங்கிருந்து அவர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கிட்டத்தட்ட ஒருமாத காலமாக அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனையில் காமராஜை நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
பின்னர் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் காமராஜுக்கு 95 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவரை குணப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த அமைச்சர் காமராஜ் இன்று காலை வீடு திரும்பினார். வீடு திரும்பினாலும் சில நாட்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.