தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.தங்கராஜிடம் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (பிப். 4) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரைப்பட உலகுக்குப் பெருமை சேர்த்திடும் வகையில் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்திட 2013-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு 10 கோடி ரூபாயை மானியமாக வழங்கினார்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற 9-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாயும், 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு வழங்கப்பட்டு வந்த 50 லட்சம் ரூபாயை, 2018-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார். 2019-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.
அந்த வகையில், தற்போது சென்னையில் 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ள 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதல்வர் இன்று, இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.தங்கராஜிடம் வழங்கினார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.