தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தக்கட்டமாக கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவடட் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வன் ஆகியோர் இன்று கோவி ஷீல்டு கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் ஜனவரி 16 முதல் சுகாதார பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் 5 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனுமதிக்கப்பட்ட 15 மையங்களில் கரோன தடுப்பூசிகள் போடப்படுகிறது. மேலும் 2 தனியார் மருத்துவமனைகளுக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 3800-க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 632 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரை யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து தற்போது வருவாய் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

படிப்படியாக பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மாவட்டத்துக்கு 25 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் மருந்துகளை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனாவில் இருந்து முழுமையாக பாதுகாக்க தடுப்பூசி போடுவதே தீர்வாகும். கரோனா தடுப்பூசி போட்டாலும் கூட அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

சானிடைசர் மற்றும் சோப்பு பயன்படுத்தி கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி பாலன், மருத்துவ கண்காணிப்பாளர் பாவலன், துணை முதல்வர் கண்காணிப்பாளர் குமரன், கரோனா தடுப்பூசி செலுத்தும் மைய பொறுப்பு அலுவலர் மாலையம்மாள் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT