வைகோ பங்கேற்ற கூட்டத்தில் பேசிய சு.சிவபாலன். | கோப்புப் படம். 
தமிழகம்

மதிமுக திருப்பூர் மாவட்டச் செயலாளர் நீக்கம்: மக்கள் நீதி மய்யத்தில் இணைய முடிவு

இரா.கார்த்திகேயன்

மதிமுகவில் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த சு.சிவபாலன் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மக்கள் நீதி மய்யத்தில் இணைய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் சு.சிவபாலன். திமுகவை விட்டு வைகோ வெளியேறியபோது, அவரது ஆதரவாளராக வலம் வந்தவர். தொடர்ந்து திருப்பூர் நகரம் மற்றும் மாநகரச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 27 ஆண்டுகளாக அக்கட்சியில் இணைந்து பல்வேறு பணிகளில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். தற்போது திடீரென அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மதிமுகவினர் கூறும்போது, ''வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருப்பூரில் மதிமுக போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதை அறிந்துகொண்டு அவர் வெளியேறியுள்ளார். தற்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைய இருப்பதாகவும், வரும் தேர்தலில் திருப்பூரில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவருக்கு விருப்பம் இல்லாத நிலையில் கட்சியில் தொடர வேண்டாம் எனத் தலைமை முடிவெடுத்து, அவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது'' என்றனர்.

இதுபற்றி சு.சிவபாலன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ''ஏற்கெனவே மதிமுக தலைமைக்குப் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் கடிதம் அனுப்பி இருந்தேன். மதிமுகவில் 27 ஆண்டுகள் இருந்த நிலையில், தற்போது விருப்பம் இல்லாத நிலையில் வெளியேறிவிட்டேன். ஆதரவாளர்களோடு மக்கள் நீதி மய்யத்தில் விரைவில் இணைய உள்ளேன்'' என்றார்.

இந்நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளராக நாகராஜனை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT