தமிழகம்

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முகத்தில் புன்னகை வரவைப்பதே ‘தோழி’ திட்டம்: போலீஸாருக்கான முகாமை தொடங்கி வைத்து ஆணையர் விளக்கம்

செய்திப்பிரிவு

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முகத்தில் புன்னகையை கொண்டு வருவதே ‘தோழி’ திட்டத்தின் நோக்கம் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - பெண்கள்மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன் காக்க அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்றுமன ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்க சென்னை காவல்துறையில் ‘தோழி’ என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த பிரிவில் உள்ள போலீஸாருக்கான ஒரு நாள் புத்துணர்வு பயிற்சி முகாம் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:

பாதுகாப்பான நகரம் சென்னை

இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான நகரம் சென்னைதான். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள், பெண்களின் வீடு தேடி சென்று அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை மற்றும் உதவி செய்ய ‘தோழி’ அமைப்புஉருவாக்கப்பட்டது. இதுவரை 400குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வருவதே ‘தோழி’ திட்டத்தின் நோக்கமாகும். சென்னை காவல்துறையின் நோக்கமும் இதுதான். பாதிக்கப்பட்டவர்களுடன்தான் காவல்துறை எப்போதும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இத் திட்டம் கொண்டுவர காரணமாக இருந்த காவல் கூடுதல் ஆணையர் (தெற்கு) ஆர்.தினகரன் கூறியதாவது: பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தோழியாக விளங்குவது ‘தோழி’ திட்டம். குற்ற வழக்கு வந்தால் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இதுதான் நடைமுறை. தற்போது இதில்,ஒருபடி மேல் சென்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எது தேவை, அவர்களது மனநிலை எப்படி உள்ளது என்பதை புரிந்து கொண்டு அதற்கு தேவையான உதவிகளை காவல்துறையின் ‘தோழி’ அமைப்பு செய்கிறது.

பெண் காவலர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீட்டுக்குச் சாதாரண உடையில் சென்று அவர்களுக்கு தேவையான உளவியல்ரீதியான தைரியத்தை கொடுப்பார்கள். நாம் தவறு செய்யவில்லை. நாம் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்ற எண்ணத்தை தெளிவுபடுத்துவார்கள். பாதிக்கப்படும் குழந்தைகளின் உளவியல் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுவித்து நல்ல சூழலை ஏற்படுத்துவார்கள். இதன்மூலம் பாதிக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் வளம் மிக்கதாக இருக்கும். இவ்வாறு கூறினார்.

குறும்படம் வெளியீடு

நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும்குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, திரைப்பட நடிகர் தாமு உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ‘உங்களுக்காக நாங்கள்' என்ற சுவரொட்டியை திறந்து வைத்ததோடு, சிறப்பாக பணி செய்த ‘தோழி’ அமைப்பு போலீஸாருக்கு காவல் ஆணையர் நினைவு பரிசு வழங்கினார். ‘தோழி’ அமைப்பின் செயல்பாடு குறித்து குறும்படமும் வெளியிடப்பட்டது.

SCROLL FOR NEXT