தமிழகம்

சசிகலா வருகையால் அதிமுகவில் எந்தத் தாக்கமும் ஏற்படாது: அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சசிகலாவின் வருகையால் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தை கடந்த ஜன.27-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். நினைவிடத்தைப் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பணிகள் நிறைவடையாததால் அனுமதி மறுக்கப்பட்டதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலா சென்னை வந்தால் ஜெயலலிதா நினைவிடம் வருவார் என்பதாலேயே நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்தபதில்கள் வருமாறு:

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் போது, எம்ஜிஆரின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. முதல்கட்ட பணிகள் முடிந்ததும் திறக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகள், திட்டங்கள் குறித்த விவரங்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள், பொதுமக்களுக்கு என அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் வந்து செல்வதால் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சசிகலா வரும் போது, அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமா?

அதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை. அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது. அமமுகவை ஆரம்பித்து அவர்கள் பலத்தை தெரிவித்துவிட்டனர். மொத்தம் 3 சதவீத வாக்குகள்தான் பெற்றனர். பொதுமக்கள், கட்சியினர் மத்தியில் அவர்கள் செயல்பாடுகள் எடுபடாது. 2021-ம் ஆண்டும் அதிமுகதான் தமிழகத்தை ஆளும்.

ஆட்சியில் இல்லாவிட்டாலும், திமுக சொல்வதுதான் நடைபெற்று வருவதாக ஸ்டாலின் கூறுகிறாரே?

அரசைப் பொறுத்தவரை மக்களுக்கு எவ்வளவு திட்டங்கள் கொண்டுவர முடியுமோ கொண்டுவந்து, ஏற்றமிகு நிலைக்கு தமிழகம் செல்கிறது. எதிர்க்கட்சிக்கே தகுதியில்லாத கட்சியாக திமுக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எவ்வளவோ திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். எங்களுக்கு எப்போது எந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது தெரியும். யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT