வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அமைச்சர்கள் குழுவுடன் பாமக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் இதுவரை 6 கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 9-ம் தேதி நடந்த பாமக நிர்வாகக்குழு கூட்டத்தில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான முடிவை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்பு தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிர்வாகக் குழு மீண்டும் கூடி அரசியல் முடிவெடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசிடம் இருந்து பதில் வராத நிலையில், அரசியல் முடிவு எடுப்பதற்காக ஜன.31-ம் தேதி நிர்வாகக் குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை அமைச்சர்கள் குழு சந்தித்து பேசியது. இந்த 5-வது கட்ட பேச்சுவார்த்தையின் போது, தமிழக அரசு குழுவும், பாமக குழுவும் பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் சந்தித்து பேசலாம். அப்போது, இடஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கலாம் என தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 31-ம் தேதி கூடிய பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் அமைச்சர்களுடனான சந்திப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், தமிழக அரசின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 3-ம் தேதி அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்கலாம். அந்த பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து நிர்வாகக் குழு மீண்டும் கூடி அரசியல் முடிவை எடுக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் அழைப்பை ஏற்று பாமக குழுவினர் நேற்று பேச்சுவார்த்தைக்கு சென்றனர். இந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், பாமகசார்பில் கட்சியின் தலைவர்ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் பங்கேற்றனர். 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்தபேச்சுவார்த்தையில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர்கள் குழுவினர் முதல்வர் பழனிசாமியிடமும், பாமக குழுவினர் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடமும் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாததால் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
ராமதாஸ் ட்விட்டர்
இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சட்டத்துக்காக மக்களா. மக்களுக்காக சட்டமா. மக்களுக்காகத்தான் சட்டங்களே தவிர, சட்டங்களுக்காக மக்கள் அல்ல. அதனால்தான் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இதுவரை 104 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.