தமிழகம்

கோவையில் சாலைகளை ஆக்கிரமிக்கும் தனியார் நிறுவனங்கள்: திண்டாட்டத்தில் வாகன ஓட்டிகள்

ம.சரவணன்

கோவை மாநகரில் சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் கடை, நிறுவனங்களின் முகப்புகளால் சாலைகள் சுருங்கி வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகரில் வாகன நிறுத்தத்துக்கு போதுமான இடம் ஒதுக்காமல் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில், சாலைகள் வாகன நிறுத்தங்களாக மாறி வருகின்றன. அதிகரிக்கும் வாகன எண்ணிக்கை, சாலையில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க சாலையை ஆக்கிரமித்து தனியார் கட்டிடங்கள் கட்டப்படுவது மாநகராட்சி நிர்வாகத்தால் கண்டுகொள்ளப்படாமல் இருந்து வருவதால், ஆக்கிரமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றன.

உதாரணத்துக்கு, கோவை ராம்நகர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு எதிர்புறம் சாலையை ஆக்கிரமித்து தனியார் கட்டிடம் சார்பில் வாகனங்களை ஏற்றி நிறுத்துவதற்காக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றும் நடவடிக்கை என்பது இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

சாலை ஆக்கிரமிப்புகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டும் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டது. இருப்பினும், செயல்படுத்த வேண்டிய உள்ளாட்சித் துறை நிர்வாகங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து வருவதே பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

இது குறித்து உள்ளூர் திட்டக்குழும அதிகாரி ஒருவர் கூறும்போது, "வணிகக் கட்டிடமோ, குடியிருப்புக் கட்டிடமோ கட்டும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிகளை கடைபிடித்தாலே போதும், சாலை விரிவாக்கம் என்பது கூட தேவையில்லை.

இருக்கும் சாலையின் பரப்பளவைக் கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திவிட முடியும். ஆனால், தங்களின் சுய நோக்கத்துக்காக சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுக்க கடுமையான அபராதம் மற்றும் தண்டனை விதித்தால்தான் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

இது குறித்து கோவை கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் நிறுவனர் கே.கதிர்மதியோன் கூறும்போது, "சாலை ஆக்கிரமிப்புக்கு முக்கிய காரணம் அதிகாரிகளின் அலட்சியமும், அதில் அவர்களுக்கு கிடைக்கும் வருமானமும்தான். கோவை மாநகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம், திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட கட்டிடம், ஆக்கிரமிப்புக் கட்டிடம் குறித்த விவரத்தை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டு இரு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரையிலும் விவரத்தை தரவில்லை. காரணம் அவர்களிடமே இல்லை. ஆக்கிரமிப்பவர்களின் மீது அடுத்த நாளே நடவடிக்கை எடுத்தால்தான் ஆக்கிரமிப்பு குறையும்" என்றார்.

இது குறித்து மாநகராட்சி நகரமைப்பு திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் கூறும்போது, "சாலை ஆக்கிரமிப்பு குறித்து அவ்வப்போது மண்டல அலுவலர்கள் மூலமாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறோம். சாலை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினால் ஆக்கிரமிப்பை இடித்து அகற்றம் செய்கிறோம். மற்றபடி, அவர்களுக்கு தண்டனை, அபராதம் விதிக்க முடியாது" என்றார்.

கோவை நகர்ப்புறம் மட்டுமல்லாது புறநகர்ப்பகுதிகளிலும் சாலைகள் பல ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்று பரவலாக புகார்கள் கூறப்படுகின்றன.

SCROLL FOR NEXT