சென்னையில் அடுத்தகட்டமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ள வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் வழித்தடத்தில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை முதல் 3 நாட்களுக்கு ஆய்வு நடத்தவுள்ளார்.
சென்னையில் அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையே முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப்பணிகள் ரூ.3,700 கோடியில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 9 கி.மீ தொலைவுள்ள இந்த வழித்தடத்தில் சர் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 8 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்த தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கி சமீபத்தில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
அமைச்சர் ஆய்வு
இந்த புதிய வழித்தடத்தில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கடந்த மாதம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், இந்த தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழு வரும் 5, 6, 7-ம் தேதியில் ஆய்வு நடத்தவுள்ளது.
இறுதிகட்ட பணிகள்
இது தொடர்பாக மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூருக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு மேம்பாட்டு அம்சங்களை தயார் நிலையில் வைத்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
ரயில் பாதுகாப்பு ஆணையர் கொண்ட குழுவினர் வரும் 5, 6, 7-ம் தேதிகளில் முழுமையாக ஆய்வு நடத்தி, மெட்ரோ ரயிலைஇயக்குவதற்கான ஒப்புதலை அளிப்பார்கள். அதன்பிறகு, தமிழக அரசிடம் முறையாக அறிவித்து, மெட்ரோ ரயில் சேவை மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். வரும் 14-ம் தேதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இருப்பினும், இதுவரையில் தமிழக அரசு சார்பில் உறுதிப்படுத்தவில்லை’’ என்றனர்.
வரும் 14-ம் தேதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.