சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களில் ஓடும் ரயிலில் பணிபுரியும் லோக்கோ பைலட், கார்டுகள் (ஓட்டுநர்கள்), பயணச்சீட்டு பரிசோதகர்கள், இதர ஊழியர்கள் தங்களது வாக்கு களைச் செலுத்த முடியாத நிலை நீண்ட நாட்களாக இருந்தது. அத்தியாவசியத் தேவை அடிப்படையில் பணி யாற்றும் இவர்களுக்கு விடு முறையும் அளிக்க இயலாது.
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணக்கோரி தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன், மதுரைக் கோட்ட உதவிச் செயலாளர் வி.ராம்குமார் என்பவர் பிரதமர், மத்திய சட்ட அமைச்சர், தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஜனவரி 1-ல் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில் ரயில்வே லோக்கோ பைலட்டுகள், கார்டுகள், டிக்கெட் பரிசோதகர், இதர பணியாளர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
இக்கோரிக்கையை மத்திய தலைமைத் தேர்தல் ஆணையச் செயலர் அபிஷேக் திவாரி பரிசீலித்து, ராம்குமாருக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், ரயில்வே தொழிலாளர்கள் அத்தியாவசியப் பணியின் கீழ் வருவதால் அவர்களுக்கும் தபால் வாக்குரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ராம்குமார் கூறுகையில், மத்திய தேர்தல் ஆணையம் சாதகமான பதில் அனுப்பியது மகிழ்ச்சியளிக்கிறது. இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம் என்றார்.