தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழக உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழக உள் மாவட்டங்களில் குறிப்பாக கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதிமுதல் இன்று வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 39 செ.மீ. மழை பெய்துள்ளது. பருவமழை சராசரி அளவான 44 சென்டி மீட்டரை நெருங்கி வரும் நிலையில், தற்போது உள் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, வலு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைபெய்துள்ளது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 10 செ.மீ., விருதுநகரில் 9, ராஜபாளையத்தில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், உள் மாவட்டங்களின் மீது புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யலாம். வங்கக் கடலில் புயல் உள்ளிட்ட புதிய நிகழ்வுகள் தற்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT