எம்ஜிஆரின் மெய்க்காப்பாளரும், எம்ஜிஆருக்கு மாற்றாக சினிமாவில் டூப் போட்டு நடித்தவரும், நாடோடி மன்னனில் எம்ஜிஆருடன் இணைந்து நாடாண்ட காலம் வரை பயணித்து எம்ஜிஆரின் இறுதிவரை துணை நின்றவருமான கே.பி.ராமகிருஷ்ணன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மெய்க்காப்பாளராகவும், உதவியாளராகவும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக உடன் பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். 58-ல் 'நாடோடி மன்னன்' படத்தில் எம்ஜிஆருக்காக டூப் போடத் தொடங்கியவர் 1978-ம் ஆண்டு 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படம் வரை இணைந்தே பணியாற்றினார்.
1930-ம் ஆண்டு எம்ஜிஆர் பிறந்த பாலக்காடு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். 9 வயதில் சென்னைக்கு வந்துவிட்டார். சௌக்கார்பேட்டையில் ஒரு பால் கடையில் வேலை செய்து வந்தார். 1946-களில் சௌக்கார்பேட்டையில் வாடகை வீட்டில் தனது தாயார், சகோதரருடன் குடியிருந்தார் எம்ஜிஆர்.
அந்த நேரத்தில் மாலை நேரங்களில் தனது சகோதரருடன் பால்கடைக்கு பாதாம் பால் சாப்பிட எம்ஜிஆர் வருவாராம். அப்போது ராமகிருஷ்ணன் பழக்கமாகியுள்ளார். அதன் பின்னர் எம்ஜிஆர் தொடங்கிய எம்ஜிஆர் நாடக மன்றத்தில் சேர்ந்துள்ளார். 1949-ல் 'மங்கையர்க்கரசி' என்கிற படத்தில் நடித்துத் திரையுலகில் நுழைந்துள்ளார். 'பூலோக ரம்பை' படத்தில் நம்பியாருக்கு டூப் போட்டு நடித்துள்ளார். எம்ஜிஆருக்கு டூப்பாக 1958-ம் ஆண்டு நாடோடி மன்னனில் நடித்தார். அன்று முதல் அவரது கடைசிப் படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை அவருடன் இணைந்து பயணித்துள்ளார்.
எம்ஜிஆருக்கு டூப்பாக மட்டுமல்ல, அவரது படத்தில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். பின்னர் எம்ஜிஆருக்கு மெய்க்காப்பாளராகவும் மாறினார். 1962 சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி அனைத்துத் தேர்தல்களிலும் எம்ஜிஆருடன் மெய்க்காப்பாளராகச் சென்றவர். எம்ஜிஆருக்கு மட்டுமல்ல நம்பியாருக்கும் ஆஸ்தான டூப் நடிகர் கேபிஆர். பூலோக ரம்பையிலிருந்து அவருக்காக கடைசி வரை டூப் போட்டு நடித்துள்ளார்.
ராமகிருஷ்ணனுக்கு 2 மகன், 2 மகள்கள். 1976-ம் ஆண்டு மூத்த மகள் திருமணத்தை எம்ஜிஆர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். எம்ஜிஆர் படங்களில் பிரபலம் அவரது சண்டைக்காட்சிகள். எம்ஜிஆர் வீராவேசமாக மோதும் காட்சிகளில் பறந்து விழுவது, பாய்வது, பல்டி அடிப்பது, உயரத்திலிருந்து குதிப்பது எனப் பல சாகசக் காட்சிகள் ரசிகர்களால் பெரும் வரவேற்பைப் பெறும். அதில் நடித்தது எம்ஜிஆர் என்றே கடைசிவரை அனைவரும் நம்பியதுண்டு.
காரணம் ஒரு இடத்தில்கூட அது எம்ஜிஆர் இல்லை எனும் அளவுக்கு அவருக்கு டூப்பாக நடித்தவர் அசத்தியிருப்பார். அப்படிப் பல முறை காயம் பட்டதுண்டு, எலும்பு முறிவு ஏற்பட்டதுண்டு. ஆனாலும், திரையில் அந்தக் காட்சியில் எம்ஜிஆருக்கு இருக்கும் வரவேற்பைக் காண்பதாலும், எம்ஜிஆர் தன்னை ஒரு சகோதரனாகக் கருதிப் பார்த்துக்கொண்டதும் அவருக்கு அனைத்து வேதனைகளையும் பறந்தோடச் செய்துவிடும்.
எம்ஜிஆர் இரு வேடங்களில் நடிக்கும் காட்சிகளில் மற்றொரு எம்ஜிஆராக ராமகிருஷ்ணன் தத்ரூபமாக நடித்திருப்பார். நடிப்பது மட்டுமல்ல இரண்டு எம்ஜிஆர் மோதும் சண்டைக்காட்சிகளில் குறிப்பாக 'நீரும் நெருப்பும்', 'நினைத்ததை முடிப்பவன்' போன்ற படங்களில் இரண்டு எம்ஜிஆர் கத்திச்சண்டை போட்டு மோதும் காட்சியில் ராமகிருஷ்ணனின் அபார ஆற்றல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இன்னொரு எம்ஜிஆராக, எம்ஜிஆருடன் நடித்த ராமகிருஷ்ணன் எம்ஜிஆரிடம் அவரது பால்ய காலத்திலேயே நட்பால் இணைந்தவர்.
எம்ஜிஆரிடம் உள்ள அன்பால் அவருடனே பயணித்தவர். எம்ஜிஆரும் அவர் மீதுள்ள அன்பால் அவரைத் தனது மெய்க்காப்பாளராகவே வைத்துக்கொண்டார். அதிலும் சோதனை மிகுந்த 1972-ம் ஆண்டுகளில் அதிமுகவைத் தொடங்கிய காலகட்டத்தில் எம்ஜிஆரின் உயிருக்கே அச்சுறுத்தலாக இருந்த நேரத்தில், பிரச்சாரங்களில், பொதுக்கூட்ட மேடைகளில் எம்ஜிஆரின் நிழல் போலவே இருந்து பாதுகாத்தவர் ராமகிருஷ்ணன்.
எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபின் பல முறை உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோதும், உங்கள் அன்பு மட்டும் போதும் தலைவா என ஒதுங்கியே வாழ்ந்தவர். எம்ஜிஆரின் பாதுகாவலராக ராமகிருஷ்ணன் இருந்தபோதும் கட்சியில் அவர் பெரிதாக பதவியை எதிர்பார்க்கவில்லை. எம்ஜிஆர் இடையில் ஜெயலலிதாவிற்குப் பாதுகாப்பாக இருக்கும்படி அனுப்பி வைத்தார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது புகழைப் பரப்புவது மட்டுமே குறிக்கோளாகச் செயல்பட்டவர் ராமகிருஷ்ணன். மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் எம்ஜிஆரைத் தெய்வமாக மதிக்கும் ரசிகர்கள் ராமகிருஷ்ணனை அழைத்து விழா எடுத்தனர். ராமகிருஷ்ணனை எம்ஜிஆரின் நிழலாகவே பார்த்தனர். அவரும் போகும் இடமெல்லாம் எம்ஜிஆர் பற்றி மட்டுமே பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இயல்பிலேயே சுயமரியாதை உள்ள ராமகிருஷ்ணன் தான் தெய்வமாகப் பூஜிக்கும் எம்ஜிஆரைத் தவிர யாரிடமும் சென்று நிற்கமாட்டேன் என்று உறுதியுடன் இருந்ததால் தனது பிள்ளைகளுக்காகக் கூட முதல்வர் ஜெயலலிதாவிடமோ அல்லது எம்ஜிஆரால் வாழ்வுபெற்ற யாரிடமும் போய் உதவி கேட்டு நின்றதில்லை. மறுபுறம் ராமகிருஷ்ணன் போன்றோருக்கு எம்ஜிஆரால் அமைந்த ஆட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தைக்கூட வெளியிட அவர் விரும்பவில்லை.
எம்ஜிஆரின் இறுதி நாள் குறித்து கே.பி.ராமகிருஷ்ணனிடம் ஒருமுறை பேசியபோது, அவரைக் கடைசியாகப் பார்த்துப் பேசியது நானாகத்தான் இருப்பேன் என்றார். எம்ஜிஆர் மறைவுக்கு முதல் நாள் இரவு அவரது படுக்கை அறையில் அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த ராமகிருஷ்ணனிடம் எம்ஜிஆர் சிரித்துக்கொண்டே, 'என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய், நேரமாகுது. வீட்டுக்குக் கிளம்பு. காலையில் பார்க்கலாம்' என்று சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்ததைக் கூறி, 'அது கடைசி சிரிப்பு என நினைக்கவில்லை' என்று கூறி கலங்கினார்.
''எம்ஜிஆருடன் அவர் வாழ்நாள் முழுதும் பயணித்தேன். வேறு யாருக்கும் கிடைக்காத பேறு அது. இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும்'' என்பதே கே.பி.ஆரின் பதிலாக இருந்தது. அவர்பால் நலம் கொண்டவர்கள் அரசிடம் உதவி கேட்கலாம் என்று கேட்டாலும், மறுத்தே வந்ததை அவரது மகன் கோவிந்தராஜன் நினைவுகூர்ந்தார்.
நாடோடி மன்னனில் எம்ஜிஆருடன் திரையுலகப் பயணத்தைத் தொடர்ந்த கேபி.ராமகிருஷ்ணன் நாடாளும் நிலையை எம்ஜிஆர் அடைந்த பின்னரும் மெய்க்காவலராக உடன் நின்றார். எம்ஜிஆரின் மறைவு வரை தொடர்ந்தது அவரது நட்பு. எம்ஜிஆரின் நினைவுகளைச் சுமந்து வாழ்ந்த பெட்டகம் ராமகிருஷ்ணன் மறைவு. எம்ஜிஆர் ரசிகர்களுக்கும், எம்ஜிஆரின் ஆளுமையைத் பதிவு செய்யும் ஆர்வலர்களுக்கும் இழப்பு என்றே கூறலாம்.