தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து 2-வது நாளாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். 4.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய், கிராம உதவியாளர்கள், தற்காலிக செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் முதல் நாளான நேற்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் து.செந்தூர்ராஜன் தலைமையில் சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் கைது செய்து தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் உள்ள ராஜ் மஹால் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை 5 மணிக்கு அவர்களை போலீஸார் விடுவித்தனர். ஆனால் அரசு ஊழியர் சங்கத்தினர் மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மறுத்து அங்கேயே இருந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில் இரவு 8 மணியளவில் தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து, மண்டபத்தில் மறுநாள் (பிப்.3) தனியார் நிகழ்ச்சி உள்ளது. எனவே, மண்டபத்தை விட்டு வெளியே செல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அரசு ஊழியர் சங்கத்தினர் அந்த மண்டபத்தில் இருந்து வெளியேறி டூவிபுரம் 2-வது தெருவில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு சென்று, அங்கு அமர்ந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இரவு முழுவதும் அங்கேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார்கள். இந்நிலையில் 2-வது நாளாக இன்று அவர்களது போராட்டம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடர்ந்தது. ஆண்களும், பெண்களும் சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.
பல்வேறு சங்கங்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்கு வந்து அரசு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து முழக்கமிட்டு சென்றனர். தங்களை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.