தமிழகம்

கிரீன்பீஸ் இந்தியா அமைப்புக்கு தமிழக அரசு அனுமதி ரத்து

உதவ் நாயக்

கிரீன்பீஸ் இந்தியா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தன்னார்வ அமைப்பின் அனுமதியை ரத்து செய்து தமிழக தன்னார்வ அமைப்புகள் பதிவாளர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நோட்டீஸ், பேச்சுரிமை மீதான புதிய தாக்குதல் என்று கிரீன்பீஸ் தமிழக அரசின் இந்த முடிவை வர்ணித்துள்ளது. உலகத் தலைவர்கள் பலரும், ஐநா தலைமைச் செயலரும் ஆரோக்கியமான ஜனநாயக நாடுகளில் சிவில் சமூகத்தின் அக்கறைகளுக்காக பேசி வரும் காலக்கட்டத்தில் தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக கிரீன்பீஸ் அமைப்பு சாடியுள்ளது.

இது குறித்து கிரீன்பீஸ் இந்தியாவின் இடைக்கால செயல் இயக்குநர் வினுதா கோபால் கூறும்போது, “தமிழக பதிவாளர் அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் கீரீன்பீஸ் அமைப்பை முடக்க கடந்த ஓராண்டுக்கும் மேலாக முயன்று வருகிறது. பேச்சு சுதந்திரம், மறுக்கும் குரல்கள் ஆகியவற்றை விகாரமான முறையில் அடக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளினால் தேச, சர்வதேச அளவில் இந்த அரசுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.

அரசின் சில பகுதிகள் வேறுபடும் கருத்துகளின் மீதான அரசின் பலதரப்பட்ட சகிப்பின்மையின் விரிவாக்கமே இத்தகைய நடவடிக்கை. கிரீன்பீஸ் அமைப்பு தங்களது தரப்பினை எடுத்துரைக்க அனுமதி வழங்காமலேயே இத்தகைய நோட்டீஸை அனுப்பியுள்ளது.

எங்களது கோரிக்கைகள், கேள்விகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்காமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்ட நடைமுறைகளை மீறுவதும், சட்டத்துக்கு எந்தவித மதிப்பையும் அளிக்காத நடவடிக்கையாகும் இது.

சட்ட நடைமுறைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்” என்றார்.

SCROLL FOR NEXT