தமிழகம்

கிரண்பேடியைத் திரும்பப் பெறக்கோரி புதுவையில் பிப்.16-ம் தேதி பந்த்: காங்கிரஸ் கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணித்த திமுக

செ.ஞானபிரகாஷ்

கிரண்பேடியைத் திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் பந்த் போராட்டத்தை வரும் 16-ம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் தலைமை வகித்தார். முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், இந்தியக் கம்யூனிஸ்ட் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், நாரா.காலைநாதன், மார்க்சிஸ்ட் ராஜாங்கம், பெருமாள், விடுதலைச் சிறுத்தைள் தேவபொழிலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஹெல்மெட் அணிவது குறித்துப் போதிய கால அவகாசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி அபராதம் விதிக்க முடிவெடுத்து அமல்படுத்த வேண்டும். அதுவரை ஹெல்மெட் பயன்படுத்துவதைக் கட்டாயப்படுத்தவும், அபராதம் விதிப்பதையும் கைவிட வேண்டும். மாநில வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகவும், தடையாகவும் இருந்து வரும் ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 5-ம் தேதி உண்ணாவிரதம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

வரும் 10-ம் தேதி குடியரசுத் தலைவரைச் சந்தித்து புதுவை மக்களிடம் பெற்ற கையெழுத்து மனுவை வழங்குவது, ஆளுநரைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி மாநிலம் தழுவிய முழு கடையடைப்புப் போராட்டம் நடத்துவது, தொடர்ந்த மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்துவது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காங். கூட்டணி ஆலோசனைக் கூட்டம்: திமுக புறக்கணிப்பு

புதுவை காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக தொடர்ந்து அதிருப்தியில் உள்ளது. ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி ஏற்கெனவே நடத்திய ஆலோசனைக் கூட்டம், தர்ணா போராட்டம், கையெழுத்து இயக்கம் உள்ளிட்டவற்றைப் புறக்கணித்தது. மேலும், தங்கள் கருத்தைக் கட்சித் தலைமையிடமும் தெரிவித்தது.

இதற்கேற்ப கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் புதுவை மாநில திமுக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு செயல்வீரர்கள் கூட்டமும் நடத்தினார். இதனிடையே கூட்டணியில் குழப்பம் இல்லை, கட்சியை வலுப்படுத்தவே ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனால் மீண்டும் காங்கிரஸோடு இணைந்து புதுவை திமுகவினர் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் தொடர்ந்து தனித்துச் செயல்படுகின்றனர். சமீபத்தில், கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால், திமுக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து புதுவை திமுகவினர் காங்கிரஸைப் புறக்கணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT