துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவால் போலீஸார் கெடுபிடி அதிகரித்துள்ள சூழலில் ஹெல்மெட் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதைத் தொடர்ந்து உள்துறைக்குப் புகார் தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம், தொடர்ந்து அணியாவிட்டால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதைக் கடுமையாகக் கடைப்பிடிக்க போலீஸாருக்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் கூட்டமும் நடத்தினார்.
முதல்வர் நாராயணசாமி படிப்படியாக அமல்படுத்துமாறு குறிப்பிட்டும் அவரது உத்தரவுகளை போலீஸார் கடைப்பிடிக்காத சூழலும் நிலவுகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணியாதோருக்கு அபராதம் விதிக்கத் தொடங்கியதால் மக்களே மறியலில் ஈடுபடத் தொடங்கினர். ஆளுநரையும், முதல்வரையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் இன்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''புதுவையில் கடந்த 3 நாட்களாக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனால் கூலி வேலை செய்பவர்கள், நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தச் சட்டத்தை மென்மையான முறையில் கடைப்பிடிக்கின்றனர். ஆனால், காங்கிரஸ் ஆளும் புதுவையில் கட்டாயப்படுத்தி அபராதம் வசூலிக்கின்றனர். முதல்வர் நாராயணசாமி கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா? இல்லையா? என்பதைத் தெரிவிக்க வேண்டும். கட்டாய அபராதத்தால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். அதனால் அபராதம் வசூலிக்கிறோம் என்ற கூற்று தவறானது. தேவைப்பட்டால் எம்எல்ஏக்கள் ஆலோசனையைக் கேட்டு நடவடிக்கையை எடுக்கலாம். இதற்காக சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டலாம். பாஜக இதற்கு ஆதரவு தரும். காவல்துறை தன் கட்டுப்பாட்டில் இல்லை, அதிகாரிகள் பேச்சைக் கேட்கவில்லை என முதல்வர் பதிலளித்தால் தன் கையாலாகாத தனத்திற்காக பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகட்டும்" என்று குறிப்பிட்டார்.
ஆளுநர் உத்தரவுப்படிதான் போலீஸார் செயல்படுவதால் பாஜக என்ன செய்யப்போகிறது என்று கேட்டதற்கு, "ஹெல்மெட் அணியக் கட்டாயப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறைக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம். கிரண்பேடியும் இவ்விஷயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
ஆளுநர் மாளிகையைச் சுற்றித் தடுப்புகள் வைத்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களே என்று கேட்டதற்கு, "144 தடை உத்தரவை நீக்க வேண்டும். நகரப் பகுதியில் உள்ள தடுப்புக் கட்டைகளை அகற்ற வேண்டும். இதுபற்றியும் மத்திய அரசுக்குக் கடிதத்தில் தெரிவித்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.