தூத்துக்குடி அருகே கொலை செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வே.பாலு வீட்டுக்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தீபக் எம். தாமோர் இன்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், அவரது படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தைs சேர்ந்தவர் வே.பாலு (55). ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவர், கடந்த 1-ம் தேதி சரக்கு வேனை மோதவிட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக முருகவேல் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம். தாமோர் இன்று காலை முடிவைத்தானேந்தலில் உள்ள பாலு வீட்டுக்கு சென்று, அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது மனைவி பேச்சியம்மாள், மகன் அருண் வேலாயுதம், மகள் ஜெயதுர்க்கை வேணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது, அவருடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி ஊரக துணை கண்காணிப்பாளர் பொன்னரசு, ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலெட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.