தமிழகம்

குடியிருப்பு பகுதிகளில் படையெடுக்கும் நடமாடும் வியாபாரிகள்; கரோனாவுக்கு பிறகு தமிழகத்தில் ஒலிமாசு அதிகரிப்பு: ஒலிபெருக்கி, ஸ்பீக்கர் சத்தத்தால் முதியோர், குழந்தைகள் பாதிப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கூம்பு வடிவ ஒலிபெருக்கி, ஸ்பீக்கர்களை அலறவிட்டபடி தெருத்தெருவாக நடமாடும் வியாபாரிகள் பொருட்களை விற்க வருவதால் இரைச்சல் காரணமாக மக்கள் மனஉளைச்சலடைகின்றனர். குறிப்பாக முதியோர், நோயாளிகள், குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் தொற்று பரவும் அபாயத்தால் மக்கள் சந்தைகளுக்குச் சென்று காய்கறிகள், உணவுப்பொருட்கள் வாங்க அச்சமடைந்தனர். அதனால்,கரோனா தளர்வுக்குப் பின் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடும் காய்கறிக் கடைகள், பழக்கடைகள் , பல்வகை துரித உணவுக்கடைகள் பெருகிவிட்டன.

தற்போது அதுவே பழக்கமாகி ஒரு தெருவுக்கு நாளொன்றுக்கு காலை முதல் இரவுக்குள் குறைந்தபட்சம் 10-க்கும் மேற்பட்ட நடமாடும் கடை வியாபாரிகள் வரத்தொடங்கிவிட்டனர். அவர்கள், ஆட்டோ, ட்ரை சைக்கிள், மினிலாரி, மினி வேன்களில் கொண்டு வரும் பொருட்களை விற்க ஸ்பீக்கர், சிறிய வகை கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். இது வீட்டுக்குள் இருப்போரை வெளியே வர வைக்கக் கையாளும் தந்திரமாகும்.

ஆனால், ஒரே இடத்தில் நின்று ஒலிபெருக்கி மூலம் பதிவு செய்த குரலை தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டே இருப்பதால் இந்தச் சத்தம் பொதுமக்களுக்குப் பெரும்மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. சிலருக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது. இதில் மூத்த குடிமக்கள், குழந்தைகள், நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இது குறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் கூறுகையில், ‘‘குடியிருப்புப் பகுதிகளில் அதிகபட்ச இரைச்சல் பகல் நேரங்களில் 65 டெசிபலையும், இரவு நேரங்களில் 55 டெசிபலையும் தாண்டக்கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறை கூறுகிறது. உலக சுகாதார நிறுவனமோ ஒலியின் அளவு 70 டெசிபல் இருக்க வேண்டும் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. 85 டெசிபலுக்கு மேல் இருந்தால் அது செவித்திறனைப் பாதிக்கும்.

கரோனாவுக்கு பிறகு மதுரை, சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் ஒலியின் அளவு சராசரியாகவே 80 முதல் 85 டெசிபலுக்கு மேல் உள்ளது. மதுரையில் கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ்நிலையம், பைபாஸ் சாலை உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் ஒலியின் அளவு 80 டெசிபலுக்கு மேல் உள்ளது.

வாகனப்போக்குவரத்தைவிட ஸ்பீக்கர், கூம்பு வடிவ ஒலிபெருக்கியால் ஒலி மாசு அதிகரிக்கிறது. 80 டெசிபல் அளவில் ஒலியை ஒருவர் 8 மணி நேரம் தொடர்ந்து கேட்டால் ரத்த அழுத்தம் 5 முதல் 10 பாயிண்ட் அதிகரிக்கிறது. சாதாரணமாக ஒருவர் பேசினால் ஒலியின்அளவு 55 முதல் 65 டெசிபல் இருக்கிறது. திடீரென்று ஒருவர் நம்அருகே வந்து கத்தினால் 65 டெசிபலுக்கு மேல் சென்றுவிடுகிறது. அவசர ஊர்தியின் சைரன் ஒலி 120 டெசிபல் . பட்டாசு வெடிக்கும்போது 155 டெசிபலுக்கு மேல் சென்று விடுகிறது. தற்போது உலகில் 460 மில்லியன் மக்கள் செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குழந்தைகள் 34 மில்லியன்.

ஒலிமாசைக் கட்டுப்படுத்தாவிட்டால் 2050-ம் ஆண்டு முதல் 900 மில்லியன் மக்கள் செவித்திறன் பாதிக்கப்படுவர்’’ என்றார்.

மதுரை உணவுப் பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில், ‘‘நகர்ப் புறங்களில் சிறியவகை ஸ்பீக்கர், ஒலிபெருக்கிகளைக் கொண்டு வாகனங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஊருக்கு ஊரு இந்த மாதிரி வண்டிகள் பெருகிவிட்டன. அவர்களை போலீஸாரால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்’’ என்றார்.

மதுரை போக்குவரத்து துணைஆணையர் சுகுமாறனிடம் கேட்டபோது, ‘‘பொருட்களை விற்கும் நோக்கில் முக்கிய சந்திப்பு மற்றும் தெருவோரங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிப் பயன்படுத்தி மைக்மூலம் பேசக்கூடாது. இது குறித்து கண்காணிக்கப்படும். எந்த இடத்தில் இது போன்று நடக்கிறது எனபொதுமக்கள் குறிப்பாக புகார் கூறினால் சம்பந்தப்பட்ட இடங்களில் போலீஸார் மூலம் கண்காணிக்கப்படும். விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மதுரை மாட்டுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அமைதியான இடம், போக்குவரத்து நிறைந்த குடியிருப்புப் பகுதிகள், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகள் என பிரித்துஒலி அளவைப் பரிசோதனை செய்வோம். அதனை வெளிப்படையாகக் கூற இயலாது’’ என்றார்.

SCROLL FOR NEXT