தமிழகம்

எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட தடை: பராமரிப்பு பணிகளை சுட்டிக்காட்டி அறிவிப்பு

செய்திப்பிரிவு

பராமரிப்பு பணிகளுக்காக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம்தேதி மறைந்த நிலையில், அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தின் ஒரு பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் ரூ.79 கோடியே 75 லட்சம் மதிப்பில்,அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தை கடந்த ஜன.27-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

நினைவிடம் திறக்கப்பட்ட நிலையிலும், அங்குள்ள அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியக அரங்கங்களின் பணிகள் நிறைவடையாமல் இருந்தது. இருப்பினும் கடந்தஒரு வாரமாக பொதுமக்கள் அதிகளவில் நினைவிடங்களுக்கு சென்று பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில், நினைவிட அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பணிகளுக்கு இடையூறாக இருப்பதால், அடுத்தஅறிவிப்பு வரும் வரை எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்படுவதாக, பொதுப்பணித்துறை அறிவித்து, அதற்கான அறிவிப்பு பலகையையும் நினைவிட வாயிலில்வைத்துள்ளது.

இதற்கிடையில், பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா,பிப்.7-ல் தமிழகம் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT