தமிழகத்தில் கடந்த ஆண்டு உருவான 3,345 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் சேகரித்து அழிக்கப்பட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அண்ணாநகர் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரம் விதிகளை மீறி உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இது தொடர்பான செய்தி, நாளிதழ் ஒன்றில் வெளியானது. அதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து, அது தொடர்பாக ஆய்வு செய்ய, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த விஞ்ஞானி உள்ளிட்ட வல்லுநர்கள் குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது வல்லுநர்கள் குழு தாக்கல் செய்தஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
வல்லுநர்கள் குழு நேரில் ஆய்வு செய்தபோது, தொடர்புடைய இடத்தில் மருத்துவக் கழிவுகள்ஏதும் இல்லை. அங்குள்ள பொதுமக்களிடம் விசாரித்தபோது, 3 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்துமருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. நாளிதழில் செய்தி வந்த பிறகு கொட்டப்படுவதில்லை எனவும் தெரிவித்தனர். அங்கு கொட்டப்பட்டிருந்த பிற கழிவுகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.
தமிழகம் முழுவதும் 339 மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 84 ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 148 தனிமைப்படுத்தும் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்து கடந்த ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை3,345 டன் கரோனா தொடர்பான மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
விதிகளை மீறி குப்பை கொட்டும் இடங்களை கண்டறிந்து, அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சென்னை மாநகராட்சி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். விதிகளை மீறும் வாகனங்களை போக்குவரத்து காவல்துறை உதவியுடன் பறிமுதல் செய்யவேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
பின்னர் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், “வல்லுநர்கள் குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை அந்தந்த துறைகள் முறையாக பின்பற்ற வேண்டும். சென்னைமாநகராட்சி, மீதமுள்ள இடங்களில் அடுத்த 4 மாதங்களுக்குள் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி,அந்த காட்சிகளைக் கொண்டு விதிகளை மீறி குப்பை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடமிருந்து இழப்பீட்டு தொகையும் வசூலிக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.