திருவள்ளூர் அருகே திமுகவின் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அருகே வெள்ளவேடு அடுத்துள்ள மேல்மணல்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன்(45). இவர், திமுகவின் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய துணை செயலாளராக உள்ளார். கருணாகரன் நேற்று மாலை பூந்தமல்லி- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வெள்ளவேடு பாலம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4-க்கும் மேற்பட்டோரைக் கொண்ட மர்மகும்பல், பட்டா கத்தியால் அவரைசரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், படுகாயமடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த வெள்ளவேடு போலீஸார் விரைந்து வந்து, கருணாகரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2016-ம் ஆண்டு கருணாகரனின் சகோதரியின் கணவரும், மேல்மணம்பேடு ஊராட்சி தலைவருமான தங்கராஜ் கொலை செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு தங்கராஜின் தம்பி வெங்கட்ராமன் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கருணாகரனும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த மேல்மணம்பேடு கிராம பொதுமக்கள், குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி, வெள்ளவேடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி, அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள வெள்ளவேடு போலீஸார், தங்கராஜ் மற்றும் வெங்கட்ராமன் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களால் கருணாகரன் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.