தமிழகம்

எஸ்ஆர்எம் பல்கலை.யில் சிறப்பு பட்டமளிப்பு விழா: 177 பேருக்கு தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கம்

செய்திப்பிரிவு

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழாவில் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பட்டம் பெற்றனர். 177 பேருக்கு தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.பி.கணேசன் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் தலைமை தாங்கினார்.

இதில், அமெரிக்க கடற்படை யின் முன்னாள் துணை அட்மிரல் ஆன் எலிசபெத் ராண்டோ கலந்து கொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். அவர் கூறும்போது, “தற்போதைய மாணவர்களுக்கு கல்வி பயில பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவற்றில் சரியான வாய்ப்பை தேர்வுசெய்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். பொறியியல், தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், உடல்நல அறிவியல், கலை அறிவியல், மேலாண்மையியல் ஆகிய படிப்புகளில் 5 ஆயிரம் பேர் பட்டம் பெற்றனர். பார்வையிழந்த மாணவர்கள் 36 பேர் பிஎட் பட்டமும், 2 பேர் எம்எட் பட்டமும் பெற்றுக்கொண்டனர்.

பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 177 மாணவ, மாணவிகளுக்கு தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுனில்காந்த் முஞ்சாலுக்கு கவுரவ டாக்டர் பட்டம் (டி.லிட்.) வழங்கப்பட்டது.

விழாவில், பல்கலைக்கழக தலைவர் பி.சத்தியநாராயணன், துணைத்தலைவர் ஆர்.சிவகுமார், துணைவேந்தர் பாக்ஸி, பதிவாளர் என்.சேதுராமன் உள்பட பேராசி ரியர்கள், மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT