தமிழகத்தின் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் பாஜக பிரமுகர் கல்யாணராமனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். அவருக்குப் பக்கபலமாகப் பின்னணியில் இருப்பவர்களையும் இனம் கண்டு தமிழக அரசு உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
''இந்தியாவில் வெறுப்பு அரசியலை மூலதனமாகக் கொண்டு இயங்கி வரும் இந்துத்துவ சனாதனக் கூட்டம், தமிழகத்திலும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கத் தொடர்ந்து முயல்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்த பாஜக அதைச் சகித்துக்கொள்ள முடியாமல் தமிழகத்தில் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கத் துடிக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பெண்கள், வீதிக்கு வந்து போராடியபோது, ஆர்எஸ்எஸ் சங் பரிவாரங்கள் சிறுபான்மையினர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர்.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் என்கின்ற நபர், கோடிக்கணக்கான மக்கள் போற்றி வணங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து இழிவான கருத்துகளை பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார்.
இந்தப் பேர்வழி பெரியாருக்கு எதிராகவும், திராவிட இயக்கத்திற்கு எதிராகவும், சிறுபான்மையினர் மீது வன்மத்துடனும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் நேரடியாகப் பேசி அவதூறு செய்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மத வன்முறைகளைத் தூண்டவும், அதன் மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்ற நப்பாசையுடனும் கல்யாணராமன் போன்ற நபர்களை ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கும்பல் பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறது.
தமிழகத்தின் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் பாஜக பிரமுகர் கல்யாணராமனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். அவருக்குப் பக்கபலமாகப் பின்னணியில் இருப்பவர்களையும் இனம் கண்டு தமிழக அரசு உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்''.
இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.