தமிழகம்

பிப்ரவரி 5 வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை பிப்ரவரி 5 வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 4,5 தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கரோனா பரவலை அடுத்து கடந்த முறையைப் போலவே சட்டப்பேரவைக் கூட்டத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் கலைவாணர் அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. முதல் நாள் கூட்டம் என்பதால் காலை 11 மணிக்குத் தொடங்கியது.

ஆளுநர் இன்று சபைக்கு வந்தவுடன் ஆளுநர் உரையை வாசிப்பதற்காக எழுந்து நின்றார். ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேச எழுந்தார். அப்போது ஆளுநர் அவரை அமரும்படி சைகை செய்தார்.

ஆளுநருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வாக்குவாதம் செய்ததால், உங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டுமானால் 5 நிமிடம் வெளிநடப்பு செய்துவிட்டு உள்ளே வாருங்கள் என்று கூறிவிட்டு, தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். இதையடுத்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கூட்டத்தொடரைப் புறக்கணிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவையை பிப்ரவரி 5 வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

பிப்ரவரி 3 (நாளை) பேரவை கூடியவுடன் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நடக்க உள்ளது. இதில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, எஸ்.பி.பாலசுப்ரமணியம், புற்றுநோய் நிபுணர் சாந்தா உள்ளிட்ட பலர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

பிப்ரவரி 4 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து அதன் மீது விவாதம் தொடங்கும்.

பிப்ரவரி 5 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம், அதற்கான பதிலுரை, தொடர்ந்து சட்ட முன் வடிவுகள் ஆய்வும் விவாதமும், முடிவில் ஏனைய அரசியல் அலுவல்களுக்குப் பின் கூட்டம் முடிவுறும்.

தினமும் காலை 10 மணிக்கு பேரவை தொடங்கும்.

இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT