டெல்லியில் உள்ள அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் நடைபெற்ற பட்ஜெட் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். உடன் காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ரந்தீப் சுர்ஜிவாலா. 
தமிழகம்

பொதுத் துறைகளை திவாலாக்கி தனியார்மயமாக்க முயற்சி: முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் கருத்து

செய்திப்பிரிவு

பொதுத்துறை நிறுவனங்களை திவாலாக்கி அதன் மூலம் தனியார்மயமாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளில் உள்ள வாராக் கடன்களை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதற்காக சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டு பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களைக் கைப்பற்றி நிர்வகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்துக்கு ரூ. 20,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகள் பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்பதுபோல் அல்லாமல், அவை கொஞ்சம் கொஞ்சமாக திவாலாகி முழுவதுமாக தனியார்மயமாக்கப் படுவதற்கான சூழலுக்குத் தள்ளப்படுவதாகவே தெரிகிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் எந்தெந்த மாநிலங்களில் தேர்தல் வர இருக்கிறதோ அந்தந்த மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் அசாமில் அதிக சலுகைகள் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை செயல்படுத்தப்பட மிக நீண்ட காலம் எடுக்கும். இவை மக்களை ஏமாற்றும் திட்டங்கள் மட்டுமே. சரக்கு மற்றும் சேவை வரிகளில் எந்த வரி குறைப்பும் செய்யவில்லை. இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கு ஆனது சாமானிய மக்களுக்கானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT