தமிழகம்

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்

செய்திப்பிரிவு

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்.

இதில் பங்கேற்க வருமாறு, பேரவைத் தலைவர் ப.தனபால், பேரவைச் செயலர் கே.சீனிவாசன் ஆகியோர் நேற்று முறைப்படி ராஜ்பவன் சென்று ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்தனர்.

கரோனா பரவல் காரணமாக, கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் உள்ள பலவகை கூட்டஅரங்கில் கூட்டம் நடக்கிறது.

விரைவில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால் ஆளுநர் உரையில் முக்கிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கலைவாணர் அரங்கில் ஏற்பாடுகளை பேரவைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆங்கிலத்தில் தனது உரையை முடித்ததும், பேரவைத் தலைவர் ப.தனபால், தமிழில் அந்த உரையை வாசிப்பார். தொடர்ந்து, பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று இதில் முடிவு செய்யப்படும்.

ஆளுநர் உரையின்போது, முதல்வர், அமைச்சர்கள் மீதுதிமுக அளித்த ஊழல் புகார்கள், வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT