சென்னையில் ஆயிரம் இடங்களில் நகர்ப்புற அடர்வனம் (மியாவாக்கி) அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கோட்டூர்புரம் பறக்கும் ரயில் நிலையம் அருகில் சென்னை மாநகராட்சி சார்பில் முதன்முறையாக அடர்வனம் அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதை முன்னிட்டு, அப்பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகளின் வளர்ச்சியை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, அடர்வனம் ஏற்படுத்தி ஓராண்டு நிறைவடைந்தது தொடர்பான மலரை அவர் வெளியிட, வட்டார துணை ஆணையர் ஆல்பிஜான் வர்கீஸ் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கோ.பிரகாஷ் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி சார்பில், மாநகரப் பகுதிகளில் உள்ள திறந்தவெளி நிலங்கள், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் நகர்ப்புற அடர்வனம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் ஆயிரம் இடங்களில் ஏற்படுத்த மாநகராட்சி இலக்கு நிர்ணயித்து, பணியாற்றி வருகிறது. இதன்மூலம் அந்த இடம் ஆக்கிரமிப்புகளில் இருந்து காக்கப்படுகிறது. அங்கு பொதுமக்கள் குப்பை கொட்டி அசுத்தம் செய்வதும் தடுக்கப்படுகிறது. கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அடர்வனம் பசுமையாக இருப்பதோடு, காற்று மாசுவை குறைத்து, தூய காற்று கிடைக்கவும் உதவும்.
இதுவரை 30 இடங்களில் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சங்கங்கள், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், திறந்தவெளி இடங்களில் அடர்வனங்களை உருவாக்க விரும்புவோர் மாநகராட்சியை அணுகினால் 48 மணி நேரத்தில் உரிய அனுமதி வழங்கப்படும். பிற்காலத்தில் இந்த அடர் வனங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.