தமிழகம்

காணாமல் போன குழந்தைகளை மீட்க ‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டம்: சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை பெருநகரில் சாலையோரம் சுற்றித் திரியும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகள், பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற திட்டத்தை சென்னை காவல்ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று தொடங்கி வைத்தார்.

அதன்படி சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த துணை ஆணையர்களின் தலைமையில் ஓர் உதவி ஆணையர் கண்காணிப்பில், 2 ஆய்வாளர்கள், குழந்தை நல காவல் அதிகாரி, குழந்தை நலகுழுமம் உள்ளிட்டவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மீட்கப்படும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்துஉதவிகளையும் இந்த தனிப்படையினர் செய்து கொடுப்பார்கள்.

திட்டத்தை தொடங்கி வைத்து காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பேசியதாவது:

தவறு செய்யும் குழந்தைகளிடம் சட்டப்படி அணுகுவதோடு நின்றுவிடாமல் அவர்களை நல்வழிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி தேவையான உதவிகளை செய்துகொடுக்க வேண்டும். சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் 8,112 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில், 7,994குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர். 118 குழந்தைகள் இதுவரை மீட்கப்படவில்லை. காணாமல் போன குழந்தைகளே இல்லைஎன்ற இலக்கை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டும். இதற்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பாக பணி செய்யும் தனிப்படையினருக்கு விருது வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் லால்வீனா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் எச்.ஜெயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT