மண் வளத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் காக்க இயற்கை உரங்களைப் பயன்படுத்தி ஏராளமான சத்துக்களைக் கொண்ட பாரம்பரிய வகையான ‘கருப்புக் கவனி’ நெல்லை பயிரிட்டு வருகிறார் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிமூலம்.
ஏர் பூட்டி உழவு ஓட்டி பக்குவமாக நிலத்தை சமன் செய்து, பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல் என இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி இந்த இயற்கை விவசாயத்தை மேற்கொள்கிறார்.
பூவம் சம்பா, சீரக சம்பா என பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வந்த ஆதிமூலத்தின் வயலை தற்போது ‘கருப்புக் கவனி’ நெல் அலங்கரித்து வருகிறது. ஒரு ஆளையே மறைக்கும் அளவுக்கு 5 முதல் 6 அடி உயரம் வரை வளர்ந்து காற்றில் அலைபாயும் இந்த நெற்பயிர் காண்பவர் கண்களுக்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
150 முதல் 160 நாட்கள் வரை வளரக்கூடிய இந்த கருப்புக் கவுனி நெல்லில் இருந்து பெறப்படும் கருமை நிற அரிசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கருப்புக் கவுனி அரிசியின் கருப்பு நிறத்துக்குக் காரணமாக இருக்கும் ‘ஆன்தோசயானின்’ என்னும் நிறமி என்கின்றனர் வேளாண் ஆய்வாளர்கள். இதயம், மூளை மற்றும் ரத்தக்குழாய்களின் செயல்பாடுகளையும் ஆரோக்கியத்தை இந்த கருப்புக் கவுனி அரிசி மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
இத்தகைய பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தியதால் நம் முன்னோர் பல ஆண்டுகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர் என்று குறிப்பிடும் ஆதிமூலம், மண் வளத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் காக்கும் பொருட்டு தாமும் இதனை பயிரிட்டு வருவதாக கூறுகிறார்.
‘‘நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோருடைய ஆலோசனைகளை கேட்டு இயற்கை முறையில் பயிரிட தொடங்கினேன். கடந்த 5 ஆண்டுகளாக காராமணி, பூவம் சம்பா மற்றும் பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு வந்தேன்.
அப்போதுதான் எனது நண்பர் ஒருவர், ‘கருப்புக் கவுனி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது’ என்றார். அதன்பிறகு கடைகளில் கருப்புக் கவனி வாங்கி, சமைத்து உண்டேன். பருப்பு வகைகளை உண்பது போன்று நார் சத்துடன் இருந்தது. வயிற்றுக்கும் இதமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து என்னுடைய நிலத்தில் கருப்புக் கவனி நெல்லை பயிரிட்டுள்ளேன். அந்தக் காலங்களில் அரசர் முதல் போர் வீரர்கள் வரை இதனை உட்கொண்டுள்ளனர். அதனால் தான் அவர்கள் உடல் உறுதியோடு நீண்ட நாட்களாக வாழ்ந்துள்ளனர்.
இதனை நாமும் உண்டு நஞ்சில்லா வாழ்வை வாழ வேண்டும் என்பதே என் நோக்கம்” என்கிறார் விவசாயி ஆதிமூலம்.
இந்த கருப்பு கவனி ஏக்கருக்கு 30 மூட்டை வரை கிடைக்கும். ஒரு கிலோ அரிசி ரூ.150 வரை விற்பனையாகும். இயற்கை வேளாண்மையில் கவனம் செலுத்துவோர், இந்த கருப்புக் கவுனி நெல் ரகத்தையும் பயிரிடலாம்.