தமிழகம்

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா? - முதல்வர் நாராயணசாமி கேள்வி

செய்திப்பிரிவு

முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் நட்டா பல்வேறு தவறான தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தான் 70 சதவீத மானியத்தை 30 சதவீதமாக மாற்றியுள்ளனர் என கூறியுள்ளார். புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சியில், வெளிமார்க்கெட்டில் கடன் வாங்க 70 சதவீத மானியத்தை விட்டுக்கொடுத்து அனுமதி பெற்றார். இதனால்தான் மானியம் 30 சதவீதமாக குறைந்தது. நான் முதல்வராக இருந்திருந்தால் இதற்கு சம்மதித்திருக்க மாட்டேன்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் 50 சதவீத இடஒதுக்கீடு பெற சட்ட வரைமுறைகளை கடந்த ஏப்ரலில் இயற்றி அனுப்பினோம். இந்த கோப்பு மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. இதற்கு அனுமதி தராதது யார் பொறுப்பு? யூனியன் பிரதேசம் என்பதால் புதுவையில் சட்டம் இயற்ற முடியாது. மத்திய அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே சட்டம் இயற்ற முடியும். ஏஎப்டி, பாரதி, சுதேசி மில்களை மூடியது யார்? அமைச்சரவையில் முடிவெடுத்து தொழிலாளர்களுக்கு விஆர்எஸ் வழங்கி, மில்லை நடத்த வேண்டும் என கூறினோம்.

கருத்து வேறுபாடு ஏற்பட்டால் ஆளுநர் கிரண்பேடி எங்களை அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அந்த கோப்பை மத்திய உள்துறைக்கு அவர் அனுப்பிவிட்டார். மத்திய உள்துறை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. விளக்கம் அளிக்கும் முன்பே மில்லை மூட கிரண்பேடி உத்தரவிட்டார். 3 மில்லுக்கும் இதுதான் நடந்தது. இதற்கு நாங்களா பொறுப்பு?

ரேஷன் கடைகளை மூடியதாக குற்றம் சாட்டினார். ரேஷன்கடையில் அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆனால் நேரடி மானியமாக பணம் வழங்க உத்தரவிட்டனர். இதனால்தான் ரேஷன்கடைகள் மூடிக் கிடக்கின்றன. மூடிக்கிடக்கும் அரசு பொது நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினோம். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்கினோம். இந்த நிதியை பிஎப் நிதிக்கு ஒதுக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார்.

உண்மையை மறைக்க முடியாது. நட்டா என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா என்று அவருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT