திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா பாப்பாக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தாளநல்லூர் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் மோட்டார், பைப்லைன்கள் சேதமடைந்து, குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணுவிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.
கரோனா தொற்று காரணமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெட்டியில் போட்டுவிட்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் கரோனா பரவல் குறைந்ததை அடுத்து நேற்றுமுதல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் நேரடியாக மனுக்களை பெற்றனர்.
அத்தாளநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனு:
அத்தாளநல்லூர் ஊராட்சியில் 3 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட வெள்ளத்தால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக மோட்டார் மற்றும் பைப் லைன்கள் சேதமடைந்துள்ளன. இதனால் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். தற்காலிகமாககூட தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ஊராட்சி செயலரும், வட்டார வளர்ச்சி அலுவலரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இப்பகுதியில் தெருவிளக்குகளும் எரியவில்லை. இதனால் தெருக்கள் அனைத்தும் இருண்டுள்ளது. குடிநீர், தெருவிளக்கு வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் பா. கார்த்திக் தம்பான், தச்சநல்லூரை சேர்ந்த ஷ்ரி கோகுலம் பஜனை குழு மற்றும் அன்னதான கமிட்டியை சேர்ந்த வி. மாசானம் உள்ளிட்டோர் அளித்த மனு:
திருநெல்வேலியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நடைபயணமாக சென்று திருக்குறுங்குடி மலைமேல் அமைந்திருக்கும் திருமலை நம்பி திருக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி சனிக்கிழமை தரிசனம் செய்து அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்நிலையில் இவ்வாண்டு கரோனா தொற்று காரணமாக அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த மாதம் முதல் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் அனுமதி அளித்துள்ளது. அதன்படி திருமலை நம்பி திருக்கோயிலுக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளிக்க வேண்டும்.
இந்து மக்கள் கட்சி தென்மண்டல செயலாளர் டிகேபி ராஜாபாண்டியன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்டகணபதி கோயில்முன் அரசின் சட்ட விதிகளுக்கு புறம்பாக 100 மீ சுற்றளவுக்குள் அமைந்திருக்கும் இடுகாடு மற்றும் சுடுகாட்டை மத பாகுபாடு இல்லாமல் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாளையங்கோட்டை அருள்தரும் ஷ்ரி கோமதி அம்பாள் உடனுறை அருள்மிகு திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில் சிவனடியார்கள் கூட்டம் சார்பில் என். தியாகராஜன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், தேவாரம், திருவாசகம், திருச்சிற்றம்பலம் என்ற புனித வார்த்தைகளை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டுள்ள சென்னையை சேர்ந்த சிவகுமார் என்ற சிவயோகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அரசின் இலவச மடிக்கணினி கேட்டு பல்வேறு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து மனுக்களை அளித்தனர்.